கேரள முதல்வரிடம் கமல்ஹாசன் கேட்ட உதவி
- IndiaGlitz, [Tuesday,November 27 2018]
உலக நாயகன் கமல்ஹாசனும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் நெருக்கமானவர்கள் என்பது தெரிந்ததே. கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், ஆரம்பித்த பின்னரும் பினரயி விஜயன் அவர்களை மரியாதை நிமித்தமாக பலமுறை சந்தித்துள்ளார். இந்த நிலையில் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கு கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிததத்தில் அவர் கூறியிருப்பதாவது:
அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டாங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி கேரள அரசியனையும், மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அளித்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வுகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும்
கஜா புயலின் தாக்கத்தினால் எங்கள் மக்கள் இழந்திருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது சகோதரர்களின் இயல்பு வாழ்க்கையை புனரமைக்கும் இப்பணியினை இன்றே தொடங்கிட வேண்டும்
பயிர்கள் சேதாரமடைந்து மரங்கள் வேருடன் சாய்ந்து படகுகளை இழந்து, மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்து மிகக்கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு உன்னதமான மானுடக்கருணையை உணர்த்திட வேண்டிய அத்தியாவசியமான தருணம் இது. மனிதாபிமானமே மனிதத்தின் அடிப்படை உணர்வு. அதுவே நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வுப்பாலம். அதுதான் இன்று, இப்பொழுது, இங்கே எங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.