75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு ஏன் வரவில்லை; திமுக அரசுக்கு கமல் கேள்வி

திமுக அரசு ஆரம்பித்து 75 நாட்களாகியும் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய திட்டமான இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் என்ற திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை என கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குடும்பத்தலைவியின் உழைப்பின் மதிப்பு, கணவனின் அலுவலக வேலை மதிப்பைவிட குறைந்ததல்ல என்று உச்சநீதிமன்றமே ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது .இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்னும் மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துக் கொண்டனர். தமிழகத்தில் துவங்கி அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல் வரை இது எதிரொலித்தது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இன்றைய பணவீக்கத்தை உடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை. இல்லத்தரசிகளுக்கு எதுவுமே இல்லாத நிலையில் இந்த சிறிய தொகை அவர்களுக்கு கிடைக்கிறதே என்று தான் கருத வேண்டியுள்ளது. ஒரு சிறு துவக்கம் என்ற அளவில் மனதை தேற்றிக் கொள்ளலாம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊதியத்தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம் பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்கள் ஆகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது

சமூக நலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் தமிழகம், குடும்பத்தலைவிகளுக்கான ஊதியத்தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல. திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்’ என கமலஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.