இந்த கோபத்தை அரசியல்வாதிகளிடம் காட்டுங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்

  • IndiaGlitz, [Monday,August 28 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் குறித்து மறைமுகமாகவும், நேரடியாகவும் பேச தவறுவதில்லை என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்ததே. இந்த நிலையில் நேற்றும் கமல்ஹாசன் அரசியல்வாதிகள் குறித்து சில கருத்துக்களை கூறினார்.

ஜூலி பொய் கூறினார் என்பதற்காக ஆத்திரப்படும் பொதுமக்கள் ஏன் பொய்யை மட்டுமே கூறி வரும் அரசியல்வாதிகள் மீது கோபப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பினார். குண்டர் சட்டத்தில் உள்ளே செல்ல வேண்டியவர்கள், அப்பாவிகள் மீது குண்டர் சட்டத்தை திணிப்பதாகவும், அரசியல்வாதிகள் மீதான கோபத்தை பாதுகாத்து வைத்திருந்து சமயம் வரும்போது வெளிப்படுத்துங்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஜூலி, காயத்ரி போன்றோர் நம்மில் ஒருவர் என்றும், அவர்கள் மீது இந்த அளவுக்கு அதிகப்படியான வெறுப்பை வெளிப்படுத்த அவசியமில்லை என்றும், அவர்களை தாராளமாக மன்னிக்கலாம் என்றும் கூறிய கமல், அவர்கள் அப்படியும் திருந்தவில்லை என்றால் திருந்தும் வரை தொடர்ந்து மன்னித்து கொண்டே இருங்கள் என்றும் பார்வையாளர்களுக்கு கமல் வேண்டுகோள் வைத்தார்.