தமிழக அரசுக்கு ஒரே கோரிக்கையை வைத்த கமல்-விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் நேற்று சென்னை அருகேயுள்ள பட்டினப்பாக்கம் பகுதிக்கு சென்று அங்கு கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் இல்லங்களை பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், 'கடல் சீற்றத்தால் மீனவர்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீற்றத்தை தடுப்பது எப்படி என்று அரசு திட்டமிட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதைவிடுத்து மீனவர்களை இடமாற்றுவது நல்ல ஆலோசனை அல்ல. நான் எப்படி ஸ்டுடியோ பக்கத்தில் குடியிருக்க விரும்புவேனோ அதேபோல் மீனவர்கள் கடல் பக்கத்தில் குடியிருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்' என்று கூறினார்.
இந்த நிலையில் கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நடிகர் விஷாலும் அதே கோரிக்கையை தமிழக அரசுக்கு வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். தற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனையை தருகிறது. இது தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த சம்பவம் பெரிய செய்தியான பின்னரும் கூட எந்த அதிகாரியும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது அதைவிட வேதனை. தமிழக அரசு இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments