கமல்-ஸ்ருதி படம் மைக்கேல் மதனகாமராஜன் 2-ஆம் பாகமா?

  • IndiaGlitz, [Sunday,February 07 2016]

கமல்ஹாசன், குஷ்பு, ஊர்வசி, ரூபிணி, நாகேஷ் உள்பட பலர் நடித்த சூப்பர் ஹிட் படம் 'மைக்கேல் மதனகாமராஜன். சிங்கீதம் சீனிவாசன் இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல், நான்கு வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தார். இளையராஜாவின் இசையில், பஞ்சு அருணாசலத்தின் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் 2வது பாடம் தற்போது தயாரிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் நடிக்கவுள்ள முதல் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்த படம் அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை 'மைகேல் மதனகாமராஜன்' படத்தின் சாயல் போன்று இருப்பதாகவும், இந்த படம் 'மைகேல் மதனகாமராஜன்' படத்தின் 2ஆம் பாகமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் மைகேல் மதனகாமராஜன்' படத்தின் நாயகிகளாக நடித்த குஷ்பு, ஊர்வசி, ரூபிணி ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக கமல் மனைவியாக நடிக்க ரம்யாகிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார். இருப்பினும் இந்த வதந்தி மிக வேகமாக பரவிவருகிறது.