ஒரே பாட்டில் முன்னேற இது சினிமா அல்ல: கமல், ரஜினிக்கு பிரபல நடிகர் அறிவுரை
- IndiaGlitz, [Wednesday,February 14 2018]
அரசியலில் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேற வேண்டும் என்றும், பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்து உடனே முதல்வராக, இது ஒன்றும் ஒரே பாட்டில் முன்னேறும் சினிமா அல்ல என்றும், பிரபல நடிகரும் வேளச்சேரி எம்.எல்.வுமான வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.
அதிமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நடிகர் வாகை சந்திரசேகர், 'நான் சினிமா துறையில் 40 ஆண்டுகாலம் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இனிமேல் நடிகர்கள் அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவக்கி முதலமைச்சர் ஆகிவிட முடியாது. இதற்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தான் முன் உதாரணம் என கூறினார்.
மேலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு பொம்மைகளின் நூல் மோடி கையில் உள்ளதாகவும், அவர் இழுக்கும் அசைவுக்கேற்ப இந்த இரண்டு பொம்மைகளும் ஆடிக்கொண்டிருப்பதாகவும் கூறிய வாகை சந்திரசேகர், இதுதான் ஒரு துன்பம் என்றால் பின்னாலேயே சினிமா துறையிலிருந்து இன்னொரு பெருந்துன்பம் வந்துகொண்டிருப்பதாக கமல், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கூறினார்.
வயது இருக்கும் வரை ஆடித் தீர்த்துவிட்டு, புகழையும் பணத்தையும் சம்பாதித்துவிட்டு, வயதான பின்னர் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருவதாக கூறிய சந்திரசேகர், கமலாக இருந்தாலும் ரஜினியாக இருந்தாலும், அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவங்கி முதலமைச்சர் ஆகிவிட முடியாது. நடிகர்கள் தனிக்கட்சி துவக்கி வெற்றிபெற்றுவிட முடியாது என்பதற்கு விஜயகாந்த்தான் முன் உதாரணம் என்றும் கூறினார். சந்திரசேகரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.