பேரறிவாளன் விடுதலை: கமல், குஷ்பு உள்பட பிரபலங்களின் கருத்து!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இன்று சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அவரது விடுதலைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் திரையுலகை சேர்ந்த உலக நாயகன் கமல்ஹாசன், நடிகை குஷ்பூ, இயக்குனர் சீனு ராமசாமி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:

உலக நாயகன் கமல்ஹாசன்: ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்.

நடிகை குஷ்பு: தன் மகனுக்காக ஒரு தாயின் போராட்டம் இறுதியில் வெற்றியைக் காண்கிறது. உண்மையிலேயே தன் மகனுக்காக எல்லா அமைப்புகளுக்கும் எதிராகப் போராடிய தாயின் எழுச்சியூட்டும் வெற்றி

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி: முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறை முடக்கம். தாயின் போராட்டம்... எல்லாம் இன்று முடிவிற்கு வந்துள்ளது... இன எழுச்சி நாளில் தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கிடைத்த இனிப்பான செய்தி அண்ணன் பேரறிவாளனின் விடுதலை. நீதியை நிலை நாட்டிய உச்ச நீதிமன்றத்திற்கும், சட்ட வல்லுநர்களுக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி..

இயக்குனர் சீனுராமசாமி: 31 ஆண்டுகள் போராடி ஒரு தர்மத்தாய் வெற்றி பெற்றார்.