ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் குறித்து கமல் கருத்து
- IndiaGlitz, [Monday,March 13 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே சமூக விழிப்புணர்ச்சியையும், ஒரு குடிமகனாக தனக்குள் எழும் உணர்ச்சியையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். இந்த கருத்துக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பையும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சி கமல் மீது போலீஸ் புகாரும் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல் பேட்டி அளித்தார். இதில் அவர் தனது பாணியில் பல பரபரப்பு கருத்துக்களை கூறினார். அதுகுறித்து தற்போது பார்ப்போம்
அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது எனது முதல் தகுதி போதும் என்றும், தற்போது அரசியல் வர்த்தகமாகிவிட்டதால் தவறுகள் அதிகரிப்பதாகவும், இந்த தவறுகள் காரணமாக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுவதாக கமல் கூறினார்
காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும் என்று கூறிய கமல் மக்களுக்காக பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும், தற்கால அரசியலுக்கு எளிமையான அணுகுமுறையுடன் கூடிய தலைவர்கள் நாட்டிற்கு தேவைப்படுவதாகவும் கூறினார். மேலும் சாதியை எடுத்துவிடுவது தான் தனது கொள்கை என்றும் சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார்.
சிவப்பு சட்டையை தான் அணிந்திருப்பதால் கம்யூனிஸ்ட் என்று அர்த்தமல்ல என்று கூறிய கமல், தனது கோபத்தின் வெளிப்பாடாக கூட இந்த சிவப்பு இருக்கலாம் என்று கூறினார்
தனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது என்றும் காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளதாக கூறிய கமல், நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநீதிக்கு எதிராக நிச்சயம் குரல் கொடுப்பேன் என்று உறுதியளித்தார்.
தனது விஸ்வரூபம் படத்தின் பிரச்சனை குறித்து அவர் கூறியபோது, 'விஸ்வரூபம் படத்துக்கு வந்த பிரச்னைக்கு இஸ்லாமியர்கள் காரணமல்ல என்று கூறினார்.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்கள் குறித்து கமல் கூறியபோது, 'ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாமல் ஜெயலலிதா இருந்ததால் இந்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் மக்கள் வேறு ஒரு தலைமைக்குத்தான் வாக்களித்தார்கள் என்றும், அந்த தலைவர் தற்போது இல்லாததால் தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதே சரியானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டிக் கேட்க மக்கள் தயாராக வேண்டும் என்று கூறிய கமல், அதே நேரம் வாக்குகளை விலை பேசுபவர்களால் தட்டிக்கேட்க முடியாது என்றும் அவர் கூறினார்.