விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகையின் மகள்
- IndiaGlitz, [Saturday,August 13 2016]
சீயான் விக்ரம் நடித்து முடித்துள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் உதவி இயக்குனராக பிரபல நடிகை லிசி மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பணிபுரிந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பிய கல்யாணி, ஆனந்த் சங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்ததாகவும், தந்தை பிரியதர்ஷனை போலவே பெரிய இயக்குனர் ஆகவேண்டும் என்பதே அவருடைய கனவு என்றும் கூறப்படுகிறது.
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.