தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களுக்கு மிகப்பெரிய விருது: தமிழக அரசு அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,August 15 2020]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை தாங்கள் அணிந்திருந்த சேலையில் முடிச்சுப்போட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருதை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டறை நீர்த்தேக்கத்தில் இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென 4 பேர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதனை அடுத்து அவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த போது கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், மற்றும் ஆனந்தவள்ளி ஆகிய மூன்று பெண்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் குதித்து இளைஞர்களை காப்பாற்றினார்கள்.

அவர்கள் தாங்கள் தான் அணிந்திருந்த சேலையை முடிச்சாக போட்டு வாலிபர்களை நோக்கி வீசினர். அந்த சேலையை பிடித்து கொண்டு இரண்டு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர் என்பதும், இருவர் துரதிஷ்டவசமாக தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தங்கள் உயிரையும் மானத்தையும் பொருட்படுத்தாமல் வாலிபர்களின் உயிரை காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு தமிழக அரசு தற்போது மிகப்பெரிய விருதுகளை அறிவித்துள்ளது. இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மூவருக்கும் இந்த விருதை அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.