களவாடிய பொழுதுகள் : ஸ்லோமோஷனில் ஒரு காதல் கவிதை
தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா நடித்த 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதிலும், ஒருசில பிரச்சனைகளால் ஏழு வருடங்கள் கழித்து இன்று வெளியாகியுள்ளது. இன்றைய டிரண்டுக்கு இந்த படம் எடுபடுமா? என்பதை இப்போது பார்ப்போம்
பிரபுதேவாவும், பூமிகாவும் கல்லூரியில் படிக்கும்போது காதலிக்கின்றனர். ஆனால் பணக்காரரான பூமிகாவின் தந்தை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பிரபுதேவாவை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். இதனால் அவர் மீது தனது செல்வாக்கால் ஒரு பொய்வழக்கை போட்டுசிறைக்கு அனுப்பிவிட்டு, பூமிகாவை பிரகாஷ்ராஜூக்கு திருமணம் செய்து வைக்கின்றார்.
இந்த நிலையில் சிறையில் இருந்து திரும்பி வரும் பிரபுதேவா, பூமிகாவுக்கு திருமணம் நடந்துவிட்டதை அறிந்து வேறு பெண்ணை திருமணம் செய்து டிரைவர் வேலை பார்த்து பிழைக்கின்றார். அவருக்கு ஒரு மகளும் பிறக்கின்றது. இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்க, அவரை காப்பாற்றும் பிரபுதேவா, அவர் தான் தனது முன்னாள் காதலி பூமிகாவின் கணவர் என்பதை அறிந்து கொள்கிறார். இந்த நிலையில் பூமிகாவும் பிரபுதேவாவை மீண்டும் சந்திக்க, இவர்கள் இருவருக்கும் உள்ள முன்னாள் காதலை பிரகாஷ்ராஜூம் தெரிந்து கொள்கிறார். அன்பான கணவர் பிரகாஷ்ராஜ், காதலித்த பிரபுதேவா ஆகிய இருவருக்கும் இடையே சிக்கி மனப்போராட்டத்தில் தவிக்கும் பூமிகா என்ன செய்யப்போகிறார், இந்த முக்கோண போராட்டத்தின் முடிவு என்ன? என்பதுதான் மீதிக்கதை
பிரபுதேவா தனது வழக்கமான ஸ்டைலை மறந்து டான்ஸ் மூவ்மெண்ட் அதிகமில்லாமல் நடித்துள்ளார். பூமிகாவுடன் காதல், காதல் தோல்வி, வசதியாக வாழ ஆசைப்படும் மனைவியுடன் வாழ்க்கை, அன்பான குழந்தைக்கு தந்தை என பிரபுதேவா தனது நடிப்பின் இன்னொரு பரிணாபத்தை வெளிப்படுத்தியுள்ளார்
கணவருக்கும் காதலருக்கும் இடையே புழுங்கி தவிக்கும் கேரக்டர் பூமிகாவுக்கு. கொஞ்சம் தடம் மாறினாலும் ஆபாசமாக மாறிவிடும் ஆபத்து இருப்பதால் இந்த கேரக்டரை இயக்குனர் நாகரீகமாக கையாண்ட விதத்திற்காக பாராட்டலாம்
வில்லனாக நடிக்காமல் குணசித்திர கேரக்டரில் நடிக்கும்போதெல்லாம் பிரகாஷ்ராஜ் நடிப்பில் விஸ்வரூபம் எடுப்பார். அதேதான் இந்த படத்திலும் பிரகாஷ்ராஜ் செய்துள்ளார். படத்தை தூக்கி நிறுத்துவதும் இவருடைய கேரக்டர்தான் என்று கூறலாம்
பெரியார் கேரக்டரில் வரும் சத்யராஜ் கேரக்டர் இந்த படத்தின் கதைக்கு தேவையில்லை என்றாலும் ரசிக்கும் வகையில் உள்ளது. அதேபோல் இந்த காதல் கதைக்கு தேவையில்லாத சமூக அவலங்கள் குறித்த வசனங்களும் அவ்வப்போது படத்தில் இடம்பெறுகிறது.
இயக்குனர் தங்கர்பச்சான் தான் இயக்கிய முதல் படமான 'அழகி' படத்தின் பாதிப்பில்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. அழகி படத்தை பார்க்காதவர்களுக்கு இந்த படத்தின் கதை புதுமையாக தெரியும். ஆபாசமில்லாமல் ஒரு டீசண்ட்டான முக்கோண காதல் கதையை குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருந்தாலும் மெதுவாக நகரும் திரைக்கதை இந்த கால டிரெண்டுக்கு சரியாக வருமா? என்பது கேள்விக்குறி. காதல் தோல்வி அடைந்த ஒரு ஜோடி, தனித்தனியாக திருமணம் செய்து கொண்ட பின்னர் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என்பதை அழகாக காட்டியிருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்
பரத்வாஜ் இசையில் சேரன் எங்கே சோழன் எங்கே' பாடல் இதம். பின்னணி இசையும் ஓகே. தங்கர்பச்சானே ஒளிப்பதிவாளர் என்பதால் காட்சிகள் உயிரூட்டமாக உள்ளது. மொத்தத்தில் பொறுமையாக உட்கார்ந்து பார்த்தால் ஒரு நல்ல காதல் கதையை ரசிக்கலாம்.
Comments