கலையரசன் - காளிவெங்கட் நடிப்பில் இன்னொரு ’ஆண்பாவம்’?

  • IndiaGlitz, [Sunday,March 06 2016]

பாண்டியராஜன் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த முதல் படம் 'ஆண்பாவம். இரண்டு சகோதரர்களுக்கு இடையே உள்ள ஜாலியான பிரச்சனைகள் மற்றும் காதல் கலந்த நகைச்சுவைப்படமான இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. தற்போது இதே பாணியில் 'ராஜா மந்திரி என்ற டைட்டிலில் ஒரு படம் உருவாகியுள்ளது.

அண்ணன் தம்பிகளாக கலையரசன் மற்றும் காளி வெங்கட் நடித்துள்ளனர். இவர்களின் பெற்றோர்களாக நாடோடிகள் படத்தில் நடித்த கோபால் மற்றும் தொலைக்காட்சி சீரியல் நடிகை மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

சுசீந்திரன், பா.ரஞ்சித் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக இருந்த உஷாகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராக உள்ளதாகவும் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து காளிவெங்கட் கூறியபோது, 'ஆண்பாவம்' பாணியில் தயாராகியுள்ள இந்த படத்தில் தான் கலையரசனுக்கு அண்ணன் கேரக்டரில் நடித்துள்ளதாகவும், இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலனவை தனது சொந்த வாழ்க்கையில் சந்தித்தது என்று கூறியுள்ளார். மேலும் 'கொடி' படத்தின் தனுஷின் நண்பராக நடித்துள்ளதாகவும், ஜீவாவின் ஜெமினி கணேசன்' படத்திலும், சிபிராஜின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.