பெப்சி தொழிலாளர்களுக்காக கலைப்புலி தாணு செய்த உதவி!
- IndiaGlitz, [Tuesday,March 24 2020]
கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெறாததால் சினிமா தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடும் சிக்கலில் உள்ளனர். தினசரி வருமானத்தை வைத்து அவர்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் திடீரென நாட்கணக்கில் வாரக்கணக்கில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது வருமானமின்றி பசியும் பட்டினியுமாக பல சினிமா தொழிலாளர்கள் சோகத்தில் உள்ளனர்
இந்த நிலையில் இதுகுறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் ’சினிமா தொழிலாளருக்கு உதவிடும் வகையில் நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூபாய் 10 லட்சம், நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 10 லட்சம் மற்றும் சிலர் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் நூறு மூட்டை அரிசியை சினிமா தொழிலாளர்களுக்காக வழங்கியுள்ளார். இதற்கு சினிமா தொழிலாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதேபோல் இன்னும் பலரிடம் இருந்து பெப்சி தொழிலாளர்களுக்கு உதவிகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது