நீண்ட இடைவெளிக்கு பின் முரசொலிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்
- IndiaGlitz, [Thursday,August 10 2017]
'முரசொலி' என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கலைஞர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு எழுதும் 'உடன்பிறப்பே' என்று ஆரம்பிக்கும் மடல் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இந்த மடலை படிப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நாளிதழை வாங்கி படிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். ஆனால் வயோதிகம் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் கடந்த சில மாதங்களாக கருணாநிதி அவர்களால் தனது தொண்டர்களுக்கு முரசொலியில் கடிதம் எழுத முடியவில்லை.
இந்த நிலையில் இன்று 'முரசொலி' பவளவிழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் எழுதிய கடிதம் ஒன்று விழா மேடையில் வாசிக்கப்பட்டது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கழக உடன்பிறப்புகளையும் அன்பெனும் அமுதூட்டி ஆதரவுக் கரம் நீட்டித் துணை நிற்கும் கோடிக்கணக்கான தமிழ் பெருமக்களையும் அரசியலுக்கும் கட்சி பிரச்னைகளுக்கும் அப்பாற்பட்டு வாழ்த்தி அருளுகின்ற அனைத்து நெஞ்சங்களையும் தூய துணைகளாகக் கொண்டு இத்தனை ஆண்டுகளைத் தாண்டிவிட்டோமே என்ற மலைப்புடன் திரும்பிப் பார்க்கிறேன், என் விழிகள் மட்டும் விரித்திடவில்லை- பெருமூச்சு காரணமாக என் சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன.
"இந்தத் துணைகள் என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்ற வேண்டுகோளுடன், எஞ்சியுள்ள பயணத்தைத் தொடருகிறேன். என் கடன் பணி செய்து கிடப்பதே!"
அன்புள்ள
மு.கருணாநிதி