சேலம் தம்பதிக்கு காஜல் அகர்வால் பெயரில் ஸ்மார்ட் கார்ட்

  • IndiaGlitz, [Wednesday,September 13 2017]

ரேசன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட்கார்ட் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு தொடங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த ஸ்மார்ட்கார்டுகளில் பல்வேறு குழப்பங்கள் இருந்ததாகவும், குறிப்பாக ஸ்மார்ட்கார்டில் குடும்பத்தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர், நடிகைகள், மரம், செடி, கொடிகளின் புகைப்படங்கள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் ராம்தாஸ் கூட சமீபத்தில் அறிக்கை விட்டிருந்தார். இந்த நிலையில் சேலம் பகுதியை சேர்ந்த ஓமலூர் என்ற பகுதியில் வாழும் பெரியசாமி-சரோஜா என்ற தம்பதியின் ஸ்மார்ட்கார்டில் குடும்பத்தலைவர் பெரியசாமியின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இருந்துள்ளது.

இதனைக்கண்ட பெரியசாமி-சரோஜா தம்பதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் ரேசன் கார்டுடன் வாக்காளர் அட்டை இணைத்ததால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த குழப்பங்கள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற தவறுகள் பலமுறை நடந்து, அதை அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டிய நிலையிலும் மீண்டும் மீண்டும் தவறு நடப்பது அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.