நீதான் என் முதல், நீதான் என் இளவரசன்: அன்னையர் தினத்தில் காஜல் அகர்வாலின் உருக்கமான பதிவு!

  • IndiaGlitz, [Sunday,May 08 2022]

நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது முதல் அன்னையர் தினத்தில் குழந்தை குறித்து உருக்கமான பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்தப் பதவில் அவர் கூறியிருப்பதாவது:

நீ எவ்வளவு விலைமதிப்பற்றவர் என்பது எனக்கு தெரியும். எப்போதும் என்னுடன் இருப்பாயா என்பதை அறிய விரும்புகிறேன். நான் உன்னை என் கைகளில் பிடித்தேன், உன் சிறிய கையை என் கைக்குள் பிடித்து, உன் சூடான சுவாசத்தை உணர்ந்தேன், உன் அழகான கண்களைப் பார்த்தேன், நான் எப்போதும் உன்னிடத்தில் அன்பு செலுத்துகிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். நீ என் முதல் குழந்தை. என் முதல் மகன். என் முதல் எல்லாம் நீயே.

வரவிருக்கும் ஆண்டுகளில், நான் உனக்கு அனைத்தையும் கற்பிக்க முடிந்த அனைத்தையும் செய்வேன், ஆனால் நீ ஏற்கனவே எனக்கு எல்லையற்ற விஷயங்களை கற்று கொடுத்துள்ளாய். ஒரு தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய், தன்னலமற்று இருக்க கற்றுக் கொடுத்தாய். தூய அன்பு என்றால் என்ன என்பதை கற்று கொடுத்தாய், என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருப்பது சாத்தியம் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தாய். இன்னும் உன்னிடம் நான் கற்று கொள்ள ஏராளமாக உள்ளது. இவை அனைத்தையும் கற்று கொடுத்த உன்னை கடவுள் எனக்கு கொடுத்தார். நீ என் இளவரசன்.

நீ வலுவாகவும் இனிமையாகவும் வளரவும், மற்றவர்களுக்கு உதவியாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். உனக்கு பிரகாசமான மற்றும் அழகான ஆளுமையுடன் கூடிய எதிர்காலம் உள்ளது. இந்த உலகம் ஒருபோதும் உன்னை மழுங்கடிக்க விடக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். நீ தைரியமாகவும் கனிவாகவும் தாராளமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நான் ஏற்கனவே உன்னிடம் இதில் பலவற்றைப் பார்க்கிறேன், உன்னை என்னுடையவர் என்று அழைப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது!

நீ என் சூரியன், என் சந்திரன், என் நட்சத்திரங்கள் அனைத்தும் நீயே. அதை நீ என்றும் மறந்து விடாதே’ என்று காஜல் அகர்வால் பதிவு செய்துள்ளார். இந்த அழகிய பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.