Kaithi Review
கைதி - விறுவிறுப்பால் கட்டி போடுகிறான்
மாநகரம் தந்த லோகேஷ் கனகராஜ் இப்போது தளபதி 64 இயக்குனர் என்கிற பெருமையோடு வலம் வந்து கொண்டிருக்கும் இளைஞர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் அவரது இரண்டாவது படமான கைதி லோகேஷுக்கும் வியர்வை சிந்தி நடித்திருக்கும் தேர்ந்த நட்சத்திரம் கார்த்திக்கும் பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது எனபதில் சந்தேகம் இல்லை.
நேர்மையான காவல்துறை அதிகாரி நரேன் எண்ணூறு கோடி மதிப்புள்ள போதை மருந்துகளை கைப்பற்றுகிறார். சரக்கை எப்படியாவது திருப்பி எடுக்க வேண்டும் என்று பயங்கர போதை மருந்து மாபியா கும்பல் திட்டம் போடுகிறது. நரேனும் அவருடைய சகா அதிகாரிகளும் ஐஜியிடம் செல்ல அங்கு வில்லனின் சூழ்ச்சியால் அத்தனை பேரும் அபாயகரமான போதை மருந்து கலந்த மதுவை அருந்தி மயங்கி விழ. நரேனுக்கு அவர்களனைவரையும் யாருக்கும் தெரியாமல் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் அதற்கடுத்து போதை மருந்துகளையும் வில்லன் கைப்பற்றாமல் மீட்க வேண்டும். அப்போது அங்கிருக்கும் லாரியில் போலீஸ்காரர்களை அல்லி போட்டுகொண்டு யார் ஓட்டுவது என்று தேட அங்கிருக்கும் சந்தேகத்தில் பிடிக்கப்பட்டிருக்கும் கைதி கார்த்தியை வற்புறுத்தி ஒட்டவைக்கின்றன. தன் குழந்தை பிறந்ததிலிருந்து பார்க்காத கார்த்தி பத்து வயதுள்ள அவளை அநாதை ஆசிரமத்தில் பார்க்க முடியாமல் அபாயகரமான இந்த விளையாட்டில் சிக்கி கொள்கிறார். கார்த்தியும் நரேனும் தங்கள் எடுத்த காரியத்தை நிறைவேற்றினார்களா இல்லையா என்பதே மீதி கதை.
பத்து வருடம் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் போலீசிடம் அதுவும் உயிருக்கே ஆபத்தான ஒரு சிக்கலில் மாட்டி கொள்ளும் டில்லி கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் கார்த்தி. தன் மகளுக்காக உருகும்போது உடல் மொழி கரைந்து குறுகியும் பின் வில்லன்கள் சூழ்ந்து நிற்கும்போது லாரியை விட்டு இறங்கி லுங்கியை மடித்து கட்டிவிட்டு துவம்சம் செய்ய இறங்கும் காட்சிகளில் மாஸ் காட்டுகிறார். தன் மகளின் நலனுக்காக உயிரை விட துணியும் இடமும் பின் கிளைமாக்ஸில் அந்த டெர்மினேட்டர் பாணி மெஷின் கண்ணை வைத்து போதை மருந்து கும்பலை சாம்பலாக்கும்பொழுதும் பார்வையாளர்களை கவர்ந்து கதாபாத்திரத்தை உயர்த்தி பிடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நரேன் ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியாக ஜொலிக்கிறார். கிட்ட தட்ட கார்த்தி நரேனுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் ஆசிரியப்படும் வகையில் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார். காமடி நடிகர் தீணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தியோடும் நரேனோடும் படம் முழுக்க பயணித்திருக்கிறார் அவரிடம் இருந்து எதிர்பார்க்கும் நகைச்சுவை பெரிதாக இல்லையென்றாலும் அவருக்க்கென்று ஜொலிக்க நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன அனைத்தையும் சிறப்பாகவே செய்திருக்கிறார். ரமணா ஹரிஷ் உத்தமன் ஹரிஷ் போராடி வில்லன்கள் கதாபாத்திரத்தில் கச்சிதம். போதை மருந்து கடத்தல்காரன் அன்புவாக வரும் நடிகர் மற்றும் அதே போல் அந்த நான்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியாக நடித்திருக்கும் இளைஞர்களுக்கும் படம் ஒரு நல்ல அடையாளமாக விளங்கும்.
கைதி படத்தின் ஆக பெரிய பலம் கதை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக பயணிப்பதே. கார்த்தி ஜார்ஜ் மரியான் கதாபாத்திர படைப்பும் பேஷ் போட வைக்கிறது. படத்திற்கு இன்னொரு ஹீரோ ஸ்டண்ட் மாஸ்டர் அன்பரிவ் என்றால் அது மிகையாகாது. அதிலும் அந்த சாதாரண இளைஞர்கள் கொடூர வில்லனை வீழ்த்தும் இடம் பலே. படத்தில் சில நெஞ்சை தொடும் இடங்களும் புத்திசாலித்தனமான திருப்புனைகளும் உண்டு.
குறைகள் என்று பார்த்தல் கதையின நம்பகத்தன்மை படம் நெடுக்க உறுத்தலாகவே இருக்கிறது. கமிஷனர் அலுவலத்தையே சூறையாட வரும் சுமார் இருநூறு பேர் கொண்ட கொடூர போதை மருந்து கும்பல் கார்த்தி என்ற ஒற்றை ஆளிடம் அடிபட்டு வீழ்வதும் எண்ணூறு கோடி மதிப்புள்ள போதை மருந்துகளை விட்டு விட்டு கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் அத்தனை போலீஸ் காரர்களும் ஓடி விடுவதும் காதில் கிலோமீட்டர் கணக்கில் பூ. திரும்ப திரும்ப வரும் ஒரே மாதிரியான ஆக்ஷன் காட்சிகளும் அலுப்பு தட்ட வைக்கின்றன. கார்த்தி அவர் மகளை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்கிற பதைபதைப்பு நமக்கு ஏற்படாமல் போவது திரைக்கதையின் சறுக்கல் தான்.
கைதி படம் முழுக்கவே இரவில் நடப்பதால் அதிகம் உழைத்திருப்பவர் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் குறிப்பாக சண்டை காட்சிகளில் அவரும் கார்த்தியுடன் சேர்ந்து சுழன்று படம் பிடித்தார் போலும். சாம் சி எஸின் இசை மற்றும் பிலோமின் ராஜின் படத்தொகுப்பு கச்சிதம். ட்ரீம் வாரியோர் பிக்ச்சர்ஸ் எஸ் ஆர் பிரபு எப்போதும் போல ஒரு பரிசார்த்தமான முயற்சிக்கு உறுதுணையாக நின்றிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக கதை யோசித்து அதை விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் திரைக்கதையிலும் இதர கதாபாத்திரங்களையும் மேலோட்டமாக கையாண்டதால் நம்மால் முழு திருப்தி பெற முடியவில்லை என்றாலும் பார்வையாளர்களை சீட்டில் சிறைபிடித்ததில் வெற்றி பெறுகிறார்.
கைதி கார்த்தியின் நடிப்புக்காகவும் புதுமுயற்சிக்காகவும் கண்டிப்பாக தியேட்டரில் போய் பார்க்க வேண்டிய படம்
- Read in English