ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளரான 14 வயது சிறுவன்… சாதித்தது எப்படி?

  • IndiaGlitz, [Wednesday,June 14 2023]

உலகிலேயே மகப்பெரிய தனியார் விமான ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 14 வயது சிறுவன் இளம் பொறியாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்த கைரான் குவாஸி என்ற 14 வயது சிறுவனை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பிரிவில் வேலைக்குச் சேந்ததுள்ளது. இதையடுத்து அந்தச் சிறுவன் ஸ்டார்லின்க் இன்ஜினீயரிங் டீம்முடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சிறிய வயதில் ஒரு பொறியாளராக எப்படி ஆக முடிந்தது என்ற சந்தேகம் பலரிடம் எழலாம். காரணம் சிறுவன் கைரான் குவாஸி 99.9% மனிதர்களைவிட கூடுதலான IQ கொண்டவர் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை குவாஸியின் பெற்றோர் அவரது 2 வயதிலேயே கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதுவும் 2 வயதிலேயே சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் வகையில் தன்னுடைய கைகளில் அவர் பதாகைகளை ஏந்தியதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து படிப்படியாக பல்வேறு சமூகவிரோத குற்றங்களுக்கு எதிராக தனது பள்ளிப் பருவத்திலேயே குவாஸி குரல் கொடுத்ததாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில் படிப்பில் தீராக ஆர்வம் கொண்ட குவாஸி 10 வயது முதலே கல்லூரி படிப்பை படிக்க துவங்கியிருக்கிறார்.

குவாஸி 10 வயதில் லிவர்மோரில் உள்ள லாஸ் பொசிடாஸ் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றுள்ளார். அடுத்து இன்டெல் லேப்ஸில் ஏஐ ஆராய்ச்சி கூட்டுறவு உறுப்பினராக பயிற்சி பெற்றிருக்கிறார். பின்னர் தனது 11 வயதில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பதற்கான சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் இணைந்து பட்டம் பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது தொழில் நுட்பரீதியாக நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஸ்பேக் எக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு அமர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய குவாஸி என்னுடைய வயதைப் பொருட்படுத்தாமல் திறமையை ஆய்வுசெய்து பணியில் சேர்த்துள்ளனர் என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார். இதையடுத்து 14 வயதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற இருக்கும் குவாஸிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.