போலீசுக்கு பயந்து கீழே இருந்த மாஸ்க்கை எடுத்து போட்ட இளைஞர்: குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு
- IndiaGlitz, [Sunday,June 28 2020]
போலீசாரின் கெடுபிடி மற்றும் அபராதம் செலுத்துவதற்கு பயந்து கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து முகத்தில் அணிந்த இளைஞரால் அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கு நேரத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது ரோந்து வந்த போலீசார்கள் முகக்கவசம் இல்லாமல் வீதியில் செல்பவர்களை பிடித்து அபராதம் போட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் போலீசாரை பார்த்த அந்த இளைஞர் தானும் மாஸ்க் இல்லாமல் வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசாரிடம் இருந்து தப்பிக்க அங்கு கீழே கிடந்த ஒரு மாஸ்க்கை எடுத்து அணிந்து உள்ளார். இதனை அடுத்து அந்த இளைஞர் போலீசாரிடம் இருந்து தப்பி வீட்டுக்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா பரவியுள்ளது. அவருக்கு மட்டுமின்றி அவருடைய பெற்றோர், தம்பி தங்கை என மொத்தம் அவருடைய குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கும் கொரோனா தொற்று உள்ளதாகவும் இதனை அடுத்து அனைவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
முகக்கவசம் இல்லாமல் சென்ற அந்த இளைஞர் போலீசாரிடம் சிக்கி இருந்தால் 100 ரூபாய் அபராதத்துடன் முடிந்திருக்கும். ஆனால் கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து அணிந்ததால் தற்போது குடும்பமே கொரோனாவால் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்க் அணிவது என்பது நம்முடைய பாதுகாப்புக்குத்தான் என்றும் போலீசாருக்கு பயந்து அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து, மாஸ்க்கை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.