தமிழ் சினிமாவின் நிரந்தர 'காதல் மன்னன்' ஜெமினிகணேசன் நினைவு நாள் பகிர்வு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் காதல் மன்னன்' என்று கூறினால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜெமினி கணேசன் அவர்கள் தான். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையே தனது தனித்திறமையை வெளிப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்த ஜெமினி கணேசன் அவர்கள் மறைந்த தினம் இன்று. இன்றைய அவரது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் குறித்த சில நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்.
புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசன் தனது இளமை பருவத்தில் ஆசிரியர் பணியை செய்தவர். பின்னர் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்ததால் அவரது பெயரின் முன் ஜெமினி என்ற பெயர் ஒட்டிக்கொண்டது.
1947ஆம் ஆண்டு 'மிஸ் மாலினி' என்ற படத்தில் ஜெமினி கணேசன் திரையில் அறிமுகமானாலும், 1952ஆம் ஆண்டு 'தாய் உள்ளம்' என்ற படத்தில் அவர் நடித்த வில்லன் பாத்திரமே அவருக்கு புகழ் பெற்று தந்தது. பின்னர் ஹீரோவாக நடித்த முதல் படமான 'மனம்போல் மாங்கல்யம்' படம் அவரை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. முதல் படமான இந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம், சோகம், பக்தி என இவர் ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை என்று சொல்லலாம். இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் விருப்பத்திற்குரிய நடிகராக இருந்தவர் ஜெமினி கணேசன். அவரது இயக்கத்தில் புன்னகை, இரு கோடுகள், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, வெள்ளி விழா, பூவா தலையா, நூற்றுக்கு நூறு, உன்னால் முடியும் தம்பி என அவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆனவை.
அதேபோல் தனிப்பட்ட முறையில் கதாநாயகனாக நடித்து வந்தாலும் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடிக்க அவர் தயங்கியதே இல்லை. குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஜெமினி கணேசன் பல படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 'பெண்ணின் பெருமை', 'கப்பலோட்டிய தமிழன்', 'கந்தன் கருணை', 'பாச மலர்', 'பார்த்தால் பசிதீரும்', 'வீரபாண்டிய கட்டபொம்மன், 'சரஸ்வதி சபதம்', 'பாவ மன்னிப்பு', ''பதிபக்தி' போன்ற படங்கள் காலத்தால் அழியாத காவிய படங்கள் ஆகும்.
புரட்சி தலைவர் எம்ஜிஆருடன் ஜெமினிகணேசன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அதுதான் 'முகராசி'. மேலும் தனது சக கால நடிகர்களான முத்துராமன், ஜெய்சங்கர், ஆகியோர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
ஜெமினி கணேசனுடன் உலக நாயகன் கமல்ஹாசன் சிறுவயதில் இருந்தே நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெமினி கணேசன் நடித்த 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் அதன் பின்னர் அவருடன் பார்த்தால் பசிதீரும், நாம் பிறந்த மண், 'உன்னால் முடியும் தம்பி', 'அவ்வை சண்முகி' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வஞ்சிக்கோட்டை வாலிபன், தேனிலவு, கல்யாண பரிசு, பார்த்திபன் கனவு, மாயா பஜார், போன்ற படங்கள் வெள்ளி விழா கண்ட ஜெமினி கணேசன் படங்கள் ஆகும்.
திரையுலகை போலவே அவர் சொந்த வாழ்க்கையிலும் காதல் மன்னனாக திகழ்ந்தவர். அலமேலு என்பவரை முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஜெமினி கணேசன் அதன் பின்னர் நடிகைகள் புஷ்பவல்லி மற்றும் சாவித்திரி ஆகியோர்களுடனும் சேர்ந்து வாழ்ந்தார்.
ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த நாயகிகளில் சாவித்திரி, அஞ்சலிதேவி, பத்மினி, சரோஜாதேவி, ஜெயந்தி, வைஜெயந்திமாலா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலும் ஜெமினி கணேசன் தயாரித்து நடித்த ஒரே படம் 'நான் அவனில்லை'. அதேபோல் அவர் இயக்கிய ஒரே படம் 'இதயமலர். இந்த படத்தில் ஜெமினி கணேசன் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசனின் மகள் ரேகா, பாலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். அதேபோல் அவருடைய இன்னொரு மகளான ஜிஜி கார்த்திக் நடித்த 'நினைவெல்லாம் நித்யா' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார். ஜெமினி கணேசனின் இன்னொரு மகள் கமலா செல்வராஜ் புகழ்பெற்ற மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசன் கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் சினிமா உள்ள வரை அனைவரின் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout