தமிழ் சினிமாவின் ஒரே காதல் மன்னன் 'ஜெமினி கணேசன்: பிறந்த நாள் பகிர்வு

  • IndiaGlitz, [Friday,November 17 2017]

தமிழ் சினிமாவை பொருத்தவரை பல நடிகர்கள் காதல் காட்சியில் உருகி உருகி நடித்திருந்தாலும், 'காதல் மன்னன்' என்று சொன்னதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜெமினி கணேசன் தான். திரைப்படங்களில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் காதல் மன்னனாக வாழ்ந்தவர்.

எம்ஜிஆர், சிவாஜி என இரண்டு ஜாம்பாவன்கள் தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் ஜெமினிகணேசன் மெல்ல மெல்ல தமிழ்த்திரையுலகில் தனி முத்திரை பதித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டார். துள்ளும் காதலனாக, நொறுங்கிய கணவனாக என காதல், சோகம் என இருவித உணர்ச்சிகளையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்

புதுக்கோட்டை பிராமண குடும்பத்தில் பிறந்த ஜெமினி கணேசன், சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்று சிலகாலம் ஆசிரியர் பணியை செய்தார். ஆனால் அந்த பணி அவருக்கு திருப்தியை தராததால் எஸ்.எஸ்.வாசன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ஜெமினி கணேசன் நடித்த முதல் படம் 'மிஸ் மாலினி'. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் வெளியான முதல் சமூக படம் இதுதான். பின்னர் 1952ஆம் ஆண்டு வெளியான 'தாய் உள்ளம்' என்ற படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.எஸ்.மனோகர். பின்னாளில் ஆர்.எஸ்.மனோகர் வில்லனாகவும், ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசனுக்கு திருப்புமுனை கொடுத்த படம் 'மனம் போல் மாங்கல்யம்'. இந்த படத்தில் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்தார் ஜெமினி. இந்தப் படத்தில் நடிப்பில் மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் தன் தனித்த மென்மையான உணர்வு முத்திரையை அழுத்தமாகப் பதித்தார் 

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் விருப்பத்திற்குரிய நடிகர்களில் ஒருவர் ஜெமினி கணேசன். இவரது இயக்கத்தில் புன்னகை, இரு கோடுகள், தாமரை நெஞ்சம், பூவா தலையா, காவியத்தலைவி, நான் அவனில்லை, வெள்ளிவிழா, நூற்றுக்கு நூறு, கண்ணா நலமா, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களில் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

எம்ஜிஆருடன் 'முகராசி' என்ற ஒரே படத்தில் இணைந்து நடித்த ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனுடன் இணைந்து 13 படங்களில் நடித்தார். குறிப்பாக கப்பலோட்டிய தமிழன், பெண்ணின் பெருமை, வீரபாண்டிய கட்டபொம்மன், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, பார்த்தால் பசிதீரும், பாவ மன்னிப்பு, பதிபக்தி போன்ற பல படங்களை கூறலாம்

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது அவருடன் நடித்த ஜெமினிகணேசன் பின்னர் அவர் பெரிய நடிகரானதும்,  'உன்னால் முடியும் தம்பி, அவ்வை சண்முகி ஆகிய படங்களில் நடித்திருந்தார். ரஜினியும் கமலும் இணைந்து நடித்த 'அலாவுதினும் அற்புத விளக்கும் படத்திலும் ஜெமினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்துடன் பொன்மனச்செல்வன், கார்த்திக்குடன் மேட்டுக்குடி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ஜெமினிகணேசன் நடித்த சிறந்த படங்களாக 'மளாணனே மங்கையின் பாக்கியம்', 'மிஸ் மாலினி', 'கணவனே கண் கண்ட தெய்வம்', 'மிஸ்ஸியம்மா', 'மாமன் மகள்', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்', 'பார்த்திபன் கனவு', 'கல்யாணப்பரிசு', 'சுமைதாங்கி', 'பாசமலர்', 'தேன் நிலவு', 'பாதகாணிக்கை', 'கற்பகம்', 'சின்னஞ்சிறு உலகம்', 'இரு கோடுகள்', 'புன்னகை', 'தாமரை நெஞ்சம்', 'நான் அவனில்லை', 'அவ்வை சண்முகி', 'பத்தினி தெய்வம்', 'வாழவைத்த தெய்வம்', 'களத்தூர் கண்ணம்மா', 'பாவமன்னிப்பு', 'பார்த்தால் பசி தீரும்', 'காத்திருந்த கண்கள்', 'ஹலோ மிஸ்டர் ஜமின்தார்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'வீர அபிமன்யு', வஞ்சிக்கோட்டை வாலிபன், 'சரஸ்வதி சபதம்', 'பணமா? பாசமா?', 'பூவா? தலையா?', 'காவியத் தலைவன்', ஆகிய படங்களள கூறலாம்.

திரையில் காதல் மன்னனாக ஜொலித்த ஜெமினி கணேசன் நிஜ வாழ்விலும் மூன்று திருமணங்கள் செய்து காதல் மன்னனாக திகழ்ந்தார். அலுமேலு பாப்ஜி, இந்தி நடிகை புஷ்பவள்ளி, நடிகையர் திலகம் சாவித்திரி ஆகியோர்களை திருமணம் செய்தார் ஜெமினிகணேசன். ஜெமினி-அலமேலு தம்பதிக்கு நான்கு மகள்களும், ஜெமினி-புஷ்பவள்ளி தம்பதிக்கு  இரண்டு மகள்ளும் ஜெமினி-சாவித்திரி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.

ஜெமினி கணேசன் நடிகர் மட்டுமின்றி சிறப்பாக கார் ஓட்டுவதில் வல்லவர். இவர் வேகத்துக்கு யாராலும் கார் ஓட்ட முடியாதாம். இவர் கார் ஓட்டும் வேகத்துக்குப் பயந்து, சில ஸ்டுடியோக்களில் இவருக்காகவே வேகத்தடை வைத்த நிகழ்வுகள் நடந்ததுண்டு.

ஜெமினி கணேசன் தயாரித்து நடித்த ஒரே படம் நான் அவனில்லை'. இதே கதைதான் இதே தலைப்பில் ஜீவன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு படம் வந்தது தெரிந்ததே. இதேபோல் ஜெமினிகணேசன், தாமரை மணாளனுடன் இணைந்து இதய மலர்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஜெமினிகணேசனுடன் இணைந்து அதிக படங்களில் நடித்த நாயகி சரோஜாதேவி. இருவரும் இணைந்து 15 படங்களில் நடித்துள்ளனர். அதற்கு அடுத்தால்போல் பத்மினி இவருடன் இணைந்து 9 படங்களில் நடித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயாரும், ஜெயலலிதாவும் ஜெமினி கணேசனுடன் நடித்துள்ளனர்.  காத்திருந்த கண்கள், திருமணம் ஆகிய படங்களில் சந்தியாவும்,  அன்னை வேளாங்கன்னி, ஆதிபராசக்தி, ஜீசஸ், சக்தி லீலை, கங்கா கெளரி படங்களில் ஜெயலலிதாவும் ஜெமினிகணேசனுடன் நடித்துள்ளனர்.

1970 ஆம் ஆண்டு காவியத் தலைவி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதும், 1971 ஆம் ஆண்டு மத்திய அரசால் பத்ம ஸ்ரீ’ விருதும் பெற்ற ஜெமினி 1974 ஆம் ஆண்டு நான் அவனில்லை திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான 'ஃபிலிம்பேர் விருதை பெற்றார். பின்னர் 1993 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான 'சவுத் ஃபிலிம்பேர் விருது ஜெமினிக்கு கிடைத்தது. 

தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினிகணேசன் அவர்கள், 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் தன்னுடைய 84 வது வயதில் காலமானார். அவர் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற திரைப்படங்களுக்கு அழிவே இல்லை. காலத்தால் அழியாத காவிய திரைப்படங்களை கொடுத்த காதல் மன்னன் என்றேன்றும் நம் நினைவில் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பதுதான் உண்மை.

More News

விஷாலின் 'இரும்புத்திரை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'இரும்புத்திரை' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு டிஜிபி ஜாங்கிட் பாராட்டு

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது

கற்பனையை விட உண்மை சம்பவம் பிரமிக்க வைக்கும்: தீரன் படம் குறித்து சூர்யா

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் சதுரங்கவேட்டை இயக்குனர் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது

31 நாள் குழந்தையை காப்பாற்ற 518 கிமீ தூரத்தை 6 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்

கேரளாவில் 31 நாள் குழந்தை ஒன்றுக்கு உடல்நலமின்றி போகவே உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய பாலாவின் 'அந்த' ஒரே ஒரு வார்த்தை

இயக்குனர் பாலாவின் படங்கள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.