'வேட்டையன்' படத்திற்கு எதிராக போராட்டம்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

அரசு பள்ளி மாணவர்கள் குறித்து ’வேட்டையன்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதை அடுத்து, அந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படத்தில், காந்தி நகர் அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்து உள்ள நிலையில், இந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறிய போது, ’சர்ச்சைக்குரிய காட்சிகள் மூலம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். அடுத்த நிலையில் உள்ள மாணவர்கள் அந்த பள்ளியில் சேர்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். பெற்றோரிடமும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, அந்த படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் என்று இயக்குனரிடம் பேசி இருப்பதாகவும், இயக்குனரும் விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த காட்சியை நீக்காவிட்டால், ’வேட்டையன்’ திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.