அவ்வையாருக்கு பின் ஆர்.பி செளத்ரி படம்தான். எதில் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,April 05 2017]

கடந்த 1953ஆம் ஆண்டு எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் கே.பிசுந்தரம்பாள் நடித்த 'அவ்வையார்' திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அவ்வையார் விநாயகரை நோக்கி தவமிருக்கும்போது, அந்த தவத்தை கலைக்க எதிரிகள் முயற்சி செய்வார்கள். அப்போது 50க்கும் மேற்பட்ட யானைகள் எதிரிகளை அடித்து துரத்தி அவ்வையாரின் தவத்தை காப்பாற்றும். இந்த காட்சிக்காக எஸ்.எஸ்.வாசன் ஐம்பதுக்கும் அதிகமான உண்மையான யானைகளை பயன்படுத்தியிருப்பார். இதனால் இந்த காட்சி பிரமாண்டமாக அமைந்திருக்கும்

இந்நிலையில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கிளைமாக்ஸில் 50க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்ட படம்தான் ஆர்யாவின் 'கடம்பன். இந்த படத்தின் கிளைமாக்ஸ் தாய்லாந்தில் சுமார் 70 யானைகள் சூழ படமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு யானைக்கும் சுமார் ரூ.2 லட்சம் செலவு செய்து மிகவும் பிரமாண்டமாக உருவாக்கபட்டுள்ள இந்த படத்தை தயாரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி.செளத்ரி. இந்த படத்தை செளத்ரி இல்லாவிட்டால் இவ்வளவு பிரமாண்டமாக உருவாக்கியிருக்க முடியாது என்று இயக்குனர் ராகவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவர் விமல் நடித்த 'மஞ்சப்பை' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து ஆர்யா கூறியபோது, 'இந்த படத்திற்காக நான் கடுமையாக உழைத்ததாக பலர் கூறுகின்றனர். ஆனால் என்னைவிட ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் அதிகமாக உழைத்துள்ளார். யானைகளின் சண்டைக்காட்சிகளை படமாக்கும்போது என்னுடன் கூடவே ஓடிவந்து கேமிராவில் படமாக்கிய சதீஷ்குமார் ஒரு கட்டத்தில் கீழே விழுந்துவிட்டார். யானைகள் ஓடிவரும் இடத்தில் கீழே விழுவது என்பது எந்த அளவுக்கு ரிஸ்க் என்பது தெரியும். அந்த ரிஸ்க்கை எடுத்தவர் அவர்' என்று சதீஷ்குமாருக்கு புகழாரம் சூட்டினார்.