கடைக்குட்டி சிங்கம்: ஒரு சிங்கத்தின் செண்டிமெண்ட் கர்ஜனை
இயக்குனர் பாண்டிராஜ் படம் என்றாலே குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற உத்தரவாதம் உண்டு. அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள எட்டாவது 'யூ' சான்றிதழ் படமான இந்த படமும் குடும்பத்துடன் காண வேண்டிய படம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் ஒரு குடும்பம் மட்டுமின்றி ஒரு குடும்ப கூட்டமே உள்ள இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
சத்யராஜ்-விஜி சந்திரசேகர் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள். ஆண் வாரிசு இல்லாததால் விஜியின் சகோதரி பானுப்ரியாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் சத்யராஜ். ஆனால் பானுப்ரியாவுக்கும் பெண் குழந்தை தான் பிறக்கின்றது. இந்த நிலையில் விஜிக்கு ஆண் குழந்தை பிறக்கின்றது. அந்த குழந்தை தான் 'கடைக்குட்டி சிங்கம்', ஐந்து அக்காள்களுடன் வளரும் கார்த்திக்கு இரண்டு அக்காள்கள் தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க போட்டி போடுகின்றனர். ஆனால் கார்த்தி, சாயிஷாவை காதல் செய்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை எழுகிறது. குடும்பத்தின் ஒற்றுமைக்காக அக்கா மகள்களில் ஒருவரை திருமணம் செய்கிறாரா? அல்லது காதலிக்கும் சாயிஷாவை கைபிடிக்கின்றாரா? என்பதே மீதிக்கதை
கிராமத்து இளைஞர், விவசாயி, கேரக்டருக்கு கார்த்திக் கச்சிதமாக பொருந்துகிறார். முதல்படமான 'பருத்திவீரன்' படத்திலேயே கார்த்தியை கிராமத்து கேரக்டரில் பார்த்துவிட்டதால் அவரை மீண்டும் கிராமத்துகாரராக பார்ப்பதில் அன்னியம் தெரியவில்லை. தந்தை சத்யராஜ் மீது நட்பு கலந்த மரியாதை, அக்காள்களிடம் பாசத்தை கொட்டுவது, குறிப்பாக குழந்தை இல்லாத அக்காவுக்கு மகனாக இருப்பது, சாயிஷாவிடம் கொஞ்சும் காதல், வில்லனிடம் காட்டும் அதிரடி என ஒவ்வொரு காட்சியிலும் கார்த்தியின் நடிப்பு மிளிர்கிறது.
சாயிஷா அழகு தேவதையாக தோன்றினாலும் இந்த படத்தின் மெயின் கதையில் ஒட்டாமல் இருப்பதுபோல் தெரிகிறது. 'மாமா மாமா' என கார்த்தியை சுற்றி சுற்றி வரும் முறைப்பெண் கேரக்டர் பிரியா பவானி சங்கர் மற்றும், அர்த்தனா பினு ஆகியோர் தங்களுக்கு கிடைத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர்.
சத்யராஜ் தனது அனுபவ நடிப்பால் ஒரு குடும்பத்தலைவர் என்ற கேரக்டரை மிளிர வைக்கின்றார். மகன் மீது பாசத்தை பொழியும் காட்சிகளிலும், தன்னிடம் அனுபதி பெற்று காதலிக்கும் மகனை ஆச்சரியத்துடன் பார்ப்பதும், மகனுக்காக தனது மகள்கள் அனைவரையும் தூக்கியெறிய முன்வரும் காட்சிகளிலும் அவரது நடிப்பு சிறப்பு
விஜி சந்திரசேகர், பானுப்ரியா இருவருக்குமே சம வாய்ப்பு இருந்தாலும் கிளைமாக்ஸ் கோவில் காட்சியில் விஜி கைதட்டல் பெறுகிறார். சமீபத்தில் வந்த படங்களில் உள்ள சூரியின் காமெடியை ஒப்பிடும்போது இந்த படம் ஓகே. ஆனாலும் சூரி தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தி கொள்ள இன்னும் தனது நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
பொன்வண்ணன், இளவரசு, சரவணன், ஸ்ரீமான் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. ஆனால் அனைவருமே தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை கச்சிதமாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் வகையில் உள்ளது. குறிப்பாக 'சண்டக்காரி வாடி வாடி, 'செங்கதிரே செங்கதிரே' பாடல் இனிமை. ஒரு கிராமத்து கதைக்கேற்ற பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பிளஸ்
வேல்ராஜின் கேமிராவில் முதல் காட்சியான ரேக்ளா ரேஸ் காட்சி 'உழவன் மகன்' லெவலுக்கு இல்லை என்றாலும் பிரமிப்பு ஏற்படுத்துகிறது. படம் முழுவதும் பச்சை பசேலாக இருப்பதற்கும் காரணம் இவரே. ரூபனின் எடிட்டிங் மிக கச்சிதம்
ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து கொண்டு அவர்களில் அனைவருக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் திரைக்கதை அமைப்பது என்பது ஒரு சவாலான விஷயம். அந்த வகையில் பாண்டியராஜின் திரைக்கதை தான் இந்த படத்தின் பெரிய பலம். இரண்டாம் பாதியில் வரக்கூடிய பிரச்சனைகளை முதல் பாதியிலேயே கோடிட்டு காட்டும் திரைக்கதை தந்திரம், கிராமத்திற்கே உரிய யதார்த்த காட்சிகள் பாண்டிராஜின் ஸ்பெஷல். ஒரு பெரிய குடும்பத்தில் இயல்பாகவே ஏற்படும் பிரச்சனைகள் அதை சரிசெய்ய எடுக்கப்படும் முயற்சிகள் ஆகியவை ஒரு கூட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்குத்தான் புரியும். கிளைமாக்ஸ் கோவில் காட்சி இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது. பூதாகரமாக தீர்க்கவே முடியாத ஒரு பிரச்சனையை, சந்தர்ப்ப சூழ்நிலை எப்படி மிக இயல்பாக முடிவுக்கு கொண்டு வருகிறது என்பதை கூறும் யதார்த்தம் சமீபகாலமாக எந்த படத்திலும் பார்த்ததில்லை. அதேப்போல் குடும்பக்கதையாக இருந்தாலும் அதிலும் சமூகத்திற்கு தேவையான விஷயத்தை ஆங்காங்கே இணைத்தது புத்திசாலித்தனம், குறிப்பாக விவசாயத்தின் பெருமை, பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த வசனங்கள் தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது. வாழ்த்துக்கள் பாண்டிராஜ்
குறையென்று பார்த்தால் ஒருசில காட்சிகள் பல படங்களில் பார்த்த காட்சியாக உள்ளது. குறிப்பாக வில்லன் ஆட்களை ஹீரோ அடிப்பதற்கு முன் ஆம்புலன்சுக்கு போன் செய்வதையெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பே பார்த்துவிட்டோம். அதேபோல் முதல் பாதி கதை கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. மேலும் 'இரும்புத்திரை' போன்ற ஒருசில படங்களை தவிர சமீபகாலமாக வரும் படங்களில் வில்லன் கேரக்டர் 'அதை செய்வேன் இதை செய்வேன் என்று உதார் விட்டுக்கொண்டு கடைசி வரை ஒன்றுமே செய்ய மாட்டார்கள். அதைத்தான் இந்த படத்தின் வில்லனும் செய்கிறார்.
மொத்ததில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய செண்டிமெண்ட் கலந்த சிறப்பான படம்
Comments