ரீல்ஸ்களில் தூள் கிளப்பும் “கச்சா பதாம்“ பாடலுக்கு சொந்தக்காரர் ஒரு கடலை வியாபாரியா?
- IndiaGlitz, [Friday,February 18 2022]
இன்ஸ்டாகிராம், யூடியூப் Shorts என எதைத் தொட்டாலும் “கச்சா பதாம்“ பாடல்தான் தற்போது ஒலிக்கிறது. அந்த அளவிற்கு வைரலான ஒரு பாடலைப் பாடியது ஒரு சாதாரண கடலை வியாபாரி என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அந்த வியாபாரி தனது சொந்தப் பாடலுக்கு உரிய தொகையை தற்போது பெறப்போகிறார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் பகுதியைச் சேர்ந்தவர் புபன் பாத்யாகர். இவர் நிலக் கடலையை அக்கம் பக்கம் ஊர்களுக்கு வண்டியில் கொண்டு சென்று விற்றுவருகிறார். இதன் மூலம் தினமும் 250-500 ரூபாய் வருமானம் பெற்றுவரும் புபன், தான் வியாபாரம் செய்யும்போதெல்லாம் அருகில் இருப்பவர்களை ஈர்ப்பதற்காக பச்சைக் கடலை எனும் பொருள்படும் “கச்சாம் பதாம்” எனும் பாடலைப் பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல் இன்ஸ்டாகிராம், யூடியூப் என சமூகவலைத்தளங்களில் பிரபலமாகியது. இதனால் ஒரே இரவில் புபன் பாத்யாகர் இந்தியாவில் பிரபலமான மனிதராகவும் மாறிப்போனார். இதையடுத்து கோதுலிபெலா எனும் இசை வெளியீட்டு நிறுவனம் கச்சாம் பதாம் பாடலை ரிமேக் செய்து ஒளிப்பரப்பியது. இதற்காக புபன் பாத்யாகருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அந்த நிறுவனம் அவருக்குக் கொடுக்க வேண்டிய 3 லட்சம் ரூபாயை இன்னும் தராமல் இருப்பதாகக் சோஷியல் மீடியாவில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவசர கதியால் பாடல் ரெக்கார்ட் செய்யப் பட்டதாலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டு விட்டது என அந்த நிறுவனம் விளக்கம் அளித்ததோடு முதற்கட்டமாக ரூ.1.5 லட்சத்திற்கு காசோலையை வழங்கி மீதித்தொகை அடுத்த வாரம் வழங்கப்படும் என ஒப்புதல் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.