புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் 'கப்ஜா'
- IndiaGlitz, [Thursday,January 26 2023]
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. .
‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17 ஆம் தேதியன்று, அவருடைய புகழுக்கு கிரீடம் சூட்டும் வகையில், ‘கப்ஜா’ படம் வெளியாகிறது. இதனை அப்படக்குழுவினர் உறுதி செய்து, பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து, வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' 'காந்தாரா' என பிரம்மாண்டமான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் 'கப்ஜா' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, சுதா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘கே. ஜி எஃப்’ படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை தீபு எஸ் குமார் கவனிக்க, சண்டைக்காட்சிகளை ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், என மூன்று சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'கப்ஜா' திரைப்படத்தின் டீசர், ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“ 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’. இந்த படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம். ” என்றார்.