நெருப்புடா....கபாலி கவுண்ட் டவுன் ஆரம்பம்...
- IndiaGlitz, [Sunday,May 29 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை பிரமாண்டமான மற்றும் அனுபவமுள்ள இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் முதன்முதலாக இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய இளையதலைமுறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு இதுவரை ரஜினி படங்களுக்கு கிடைத்திராத எதிர்பார்ப்பு என்பதை நிச்சயம் சொல்ல முடியும். அதிலும் குறிப்பாக டீசருக்கு முன், டீசருக்கு பின் என்று இந்த படத்தை பிரித்து பார்க்கலாம்.
கபாலி' படத்தின் டீசர் வெளியாவதற்கு முன் மேலும் ஒரு ரஜினி படம் என்ற அளவே இருந்த எதிர்பார்ப்பு டீசருக்கு பின் தமிழ்சினிமா, இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் பிரபலம் அடைந்தது. 'நெருப்புடா...என்று தொடங்கும் இந்த டீசரை ஒரே ஒருமுறை மட்டுமே பார்த்தவர்கள் என்று கண்டிப்பாக ஒருவர் கூட இருக்க முடியாது. பார்த்தவர்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் ரஜினியின் அதே பழைய ஸ்டைல், நடை, உடை, உடல் மொழி, மேக்கப், மற்றும் சந்தோஷ் நாராயணனின் பின்னனி இசை ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
20 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து இந்த படத்தின் டீசர் புகழ் பெற்று வரும் நிலையில் டீசரின் வெற்றியால் இந்த படத்தின் வியாபாரமும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற தயாரிப்பாளர் தாணுவின் அலுவலகத்தில் விநியோகிஸ்தர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் தெலுங்கு மற்றும் கர்நாடக மாநில ரிலீஸ் உரிமைகளின் வியாபாரங்கள் ஏற்கனவே மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்தி உரிமையை பெற பெரும் போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல்முறையாக மலாய் மொழியில் டப் செய்யப்பட்டிருக்கும் 'கபாலி' மலேசியா, சிங்கப்பூரிலும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
மேலும் ரஜினியின் படங்களுக்கு ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது என்ற நிலையில் தற்போது சீனாவிலும் 'கபாலி' படம் டப் செய்யப்பட்டு அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் என கிட்டத்தட்ட ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இந்த படத்தின் ரிலீஸ் பிரமாண்டமாக இருக்கும் என்றும் ரிலீசுக்கு முன்னதாக இந்த படம் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சொந்தமாக ரிலீஸ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.16கோடிக்கு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த படம் ரம்ஜான் திருநாளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சல்மான்கானின் சுல்தான்' ரம்ஜான் திருநாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதை தவிர்க்கும் வகையில் இந்த படம் ஜூலை 1ல் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 1ஆம் தேதி ரம்ஜான் விரதம் இருக்கும் நாட்கள் என்று ஒருசிலர் கூறினாலும், ரஜினியின் படம் எந்த நாளில் ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜூலை 10ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அதன்பின்னர் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு சென்சார் சர்டிபிகேட் கிடைத்தவுடன் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. எந்த நாளில் கபாலி' படம் ரிலீஸ் ஆனாலும் இந்த படத்தின் வசூல் நிச்சயம் உலக அளவில் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கின்றது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.