'கபாலி' புரமோஷனில் இறங்கிய மத்திய அரசு நிறுவனம்
- IndiaGlitz, [Wednesday,July 20 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியாக ரிலீஸ் ஆக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எவ்வளவு? என்பதை கணக்கிட முடியாத நிலை உள்ளது.
'கபாலி' படத்துடன் இணைந்து புரமோஷன் செய்ய ஏர் ஆசியா, ஏர் டெல், முத்தூட், ஃபைவ் ஸ்டார் சாக்லேட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசின் கீழ் உள்ள அஞ்சல் துறையும் இந்த படத்தை புரமோஷன் செய்யும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடக அஞ்சல் வட்டம், சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம் ஆகியன இணைந்து கபாலி திரைப்படத்துக்கான சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளன.
இதற்காக, சென்னை, பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை, பெங்களூரு அஞ்சல்தலை சேமிப்பு மையங்களிலும் கபாலி சிறப்பு அஞ்சல் உறை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், கபாலி திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை காண விமானத்தில் பயணிக்கும் ரசிகர்களுடன் சிறப்பு அஞ்சல் உறையும் இடம்பெற்றிருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.