Kaatru Veliyidai Review
மணி ரத்னம் என்ற பெயருக்கான ஈர்ப்பு இன்னும் குறையவில்லை என்பது அவரது ஒவ்வொரு புதிய படம் வெளியாகும்போதும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகும். இந்த மாபெரும் இயக்குனர் நட்சத்திர நடிகர் கார்த்தி உடன் இணைந்திருக்கும் ‘காற்று வெளியிடை’ பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகியிருக்கிறது. மிகச் சிறந்த காதல் திரைப்படங்களைக் கொடுத்த இயக்குனரிடமிருந்து மற்றுமொரு காதல் படமாக வந்திருக்கும் ‘காற்று வெளியிடை’ அவரது முந்தைய சாதனைகளை முறியடிக்குமா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.
வருண் (கார்த்தி) காஷ்மீர் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு போர் விமானி. 1999ல் கார்கில் யுத்தத்தின் போது பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறான். அப்போது தன் கடந்த காலக் காதலை அசைபோடுகிறான்.
காஷ்மீரில் பணியாற்றத் தொடங்கும் மருத்துவர் லீலா ஆப்ரஹாம் (அதிதி ராவ் ஹைதரி) ஒரு விபத்தில் சிக்கி மயங்கிவிழும் வருணுக்கு வைத்தியம் பார்க்கிறார். இருவருக்கும் முதல் பார்வையிலேயே பரஸ்பர ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக உருமாறுகிறது.
ஆனால் கொஞ்சம் ஆணாதிக்க மனப்பான்மையும் நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி செயல்படும் குணமும் கொண்ட வருணின் காதலை முழுமையாக ஏற்கத் தயங்குகிறாள் லீலா. வருணும் லீலாவைக் காதலித்தாலும் திருமண வாழ்க்கை தனக்கு சரியாக வருமா என்ற தயக்கத்தில் இருக்கிறான். இந்நிலையில் நடக்கும் கார்கில் யுத்தத்தில் வருண் சிறைக்கு சென்றுவிட இருவருக்கும் இடையில் நீண்ட பிரிவு ஏற்படுகிறது.
வருண் சிறையிலிருந்து மீண்டானா, தன் காதலியுடன் சேர்ந்தானா என்பவற்றை திரையில் பார்த்துத் தெரிந்துகொள்க.
இயற்கை எழிலும் போர் அபாயமும் கலந்த காஷ்மீர் எல்லைப் பகுதி, போர் விமானி நாயகன், மருத்துவராக இருக்கும் நாயகி என்று முற்றிலும் புதிய களத்தில் ஒரு காதல் கதையைக் கொடுத்திருக்கிறார் மணி ரத்னம். மணி ரத்னம் படங்களில் நாம் எதிர்பார்க்கும் மிக உன்னதமான படமாக்கம் இதிலும் இருக்கிறது. அந்த வகையில் மணி ரத்னம் ரசிகர்களை நிச்ச்யமாகத் திருப்தியடையச் செய்கிறது ‘காற்று வெளியிடை’.
ஆனால் கதை திரைக்கதை? ஈகோவும் தன்னலம் சார்ந்த சிந்தனையும் நிலையற்ற மனமும் கொண்ட ஆணுக்கும் தற்சார்பும் தன்மானமும் மிக்க பெண்ணுக்கும் இடையிலான காதலும் அதை பாதிக்கும் ஊடல்களும்தான் கதையின் மையக்கரு என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த விஷயம் இரண்டாம் பாதியில்தான் பார்வையாளருக்குப் பிடிபடத் தொடங்குகிறது. அதுவும் நாயகன் கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதியவைக்கத் தவறுவதால் அவனது செயல்பாடுகள் பார்வையாளரைக் குழப்புகின்றன. திரையில் நடக்கும் விஷயங்களுடன் ஒன்ற முடியவில்லை. ஒப்பீட்டளவில் நாயகியின் பாத்திரவார்ப்பு குறிப்பிட்டுப் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
படத்தின் முதல் பாதியில் கிட்டத்தட்ட எந்தக் காட்சியும் அழுத்தமாகவோ சுவாரஸ்யமாகவோ இல்லை. ஆனால் அனைத்துக் காட்சிகளும் அழகாகப் படம்பிடிக்கப்படுகின்றன. காஷ்மீரின் பனிமலைகள், போர்ப்படை விமானதளம், மலர்த்தோட்டங்கள் என அனைத்தும் கண்களுக்கு விருந்தாக்கப்படுகின்றன.
இரண்டாம் பாதியில் அழுத்தமான கவனம் ஈர்க்கும் காட்சிகள் உள்ளன. கார்த்தி-அதிதி இடையிலான ஊடல் காட்சிகளில் ஆங்காங்கே மணி ரத்னத்தின் தனி முத்திரை தென்படுகிறது. கார்த்தி அதிதியின் பெற்றோரை எதிர்கொள்ளும் காட்சி படத்தின் மிகச் சிறப்பான காட்சி என்று சொல்லலாம். அந்த காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு.
அதேபோல் கார்த்தி, பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பித்தபின் நிகழும் சேசிங் காட்சியில் சினிமாத்தனம் அதிகம் என்றாலும் அது படமாக்கப்பட்ட விதத்துக்காக ரசிக்க வைக்கிறது. இறுதிக் காட்சியில் கார்த்திக்கும் அதிதிக்கும் இடையில் நடக்கும் எமோஷனல் பரிமாற்றம் மனதைத் தொடுகிறது.
மணி ரத்னம் அண்மைக் காலங்களில் தமிழ்-இந்தி இரண்டு மொழிகளுக்கும் பொதுவாகப் படம் எடுப்பதால் நடக்கும் பொருத்தமின்மைப் பிழை இந்தப் படத்திலும் இருக்கிறது. தமிழர்கள் குடும்பம் என்றுக் காட்டப்படும் கார்த்தியின் குடும்பத்தில் அனைவருக்கும் இந்திக்காரர்களின் சாயல். கார்த்தியின் அப்பா பெயர் சக்ரபாணிப் பிள்ளை என்று வசனத்தில் சொல்லப்பட்டாலும் அவர் அக்மார்க் இந்திக்காரர் போலவே இருக்கிறார். தொடர்ந்து வரும் ‘சாரட்டு வண்டியில’ பாடலின் இசையும் பாடல்வரிகளும் தமிழ்த்தன்மையுடன் இருக்க, கதாபாத்திரங்களின் உடையில் இருந்து திரையில் காட்டப்படுபவை அனைத்தும் வடக்கத்திய தன்மையுடன் இருப்பது மிகவும் உறுத்தலாக உள்ளது.
வசனங்களிலும் அதே பிரச்சனை. மேற்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக வரும் கதாநாயகி, சாதாரண பேச்சில் “காற்றுள்ளவரை”, “தற்செயல்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது பொருத்தமிலாமல் உள்ளது. அதேபோல் கார்த்தியும் ‘அட என் அழகு சுந்தரி’ என்று காதலியை அழைப்பதும் பாரதியார் கவிதைகளைப் பாடுவதும் அவரது பாத்திர அமைப்புக்குப் பொருந்தவில்லை.
இதையும் மீறி வசனங்களிலும் ஒரு சில இடங்களில் மணி ரத்னம் பாணி பஞ்ச் பளிச்சிடுகிறது. “உங்க அப்பா வாயத் தொறக்காமலே என்ன ஆயிரம் கேள்வி கேக்கறாரு” என்ற வசனம் ஒரு உதாரணம்.
கார்த்திக்கு இது வித்தியாசமான வேடம். முதல் முறையாக மீசையில்லாமல் திரையில் தோன்றுகிறார். போர் விமானி வேடத்தில் பொருந்த கடினமாக உழைத்திருப்பதும் இயக்குனரின் வார்த்தைகளை அப்படியே பின்பற்றியிருப்பதும் தெரிகிறது. இருந்தாலும் அவரது தனிச் சிறப்பான இயல்புத் தன்மை தொலைந்துவிட்டதுபோன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நாயகி அதிதி ராவ் ஹைதரி தமிழ் முகம் இல்லை என்றாலும் பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். மிக அழகாக இருப்பதோடு சிறப்பாக நடித்தும் இருக்கிறார். மிக முக்கியமாக உதட்டசைவு பிரச்சனை இல்லை.
துணை நடிகர்களில் நாயகியின் தோழியாக வரும் ருக்மிணி விஜயகுமார் ஈர்க்கிறார். அவரது அபார நடனத் திறமையும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி சிறிய வேடத்தில் வந்தாலும் தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார். டெல்லி கணேஷ், கே.பி.ஏ.சி லலிதா உள்ளிட்ட மூத்த நடிகர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் அனைத்துப் பாடல்களும் கேட்பதற்கு இதமாக இருப்பதோடு மணி ரத்னம் படங்களில் வழக்கம்போல் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. பின்னணி இசையைப் பொறுத்தவரை எமோஷனல் காட்சிகளுக்கு சன்னமாகவும் சேசிங் காட்சிகளுக்கு பரபரப்பைக் கூட்டும் விதத்திலும் இசையமைத்து இயக்குனருக்குத் துணைபுரிகிறார்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் படத்தின் இன்னொரு கதாநாயகன் என்று சொல்ல்லாம். ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் என்று சொல்லும்படி இருக்கின்றன. குறிப்பாக மலை முகடுகளில் நடக்கும் இறுதி சேசிங் காட்சி படமாக்கப்பட்ட விதம் பிமிப்பைத் தருகிறது. காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைவதற்கு கலை இயக்குனர் ஷர்மிஷ்டா ராயின் பங்களிப்பும் முக்கியமானது.
மொத்தத்தில்படத்தை அழுத்தமில்லாத கதை, மெதுவாக நகரும் திரைக்கதை ஆகியவற்றை மீறி, சிறப்பான மேக்கிங் ஆங்காங்கே தென்படும் மணிரத்னம் டச் ஆகியவற்றுக்காக ’காற்று வெளியிடை’ ஒரு முறை பார்க்கலாம்.
- Read in English