Kaatrin Mozhi Review
'காற்றின் மொழி' திரைவிமர்சனம்
கருத்துள்ள தென்றல் காற்று
இயக்குனர் ராதாமோகன் படம் என்றாலே சமூகத்திற்கு தேவையான கருத்துக்களுடன் கூடிய குடும்ப படமாகத்தான் இருக்கும் என்பது தெரிந்ததே. அதிலும் இந்த முறை 'மொழி' படத்திற்கு பின்னர் மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்திருந்ததால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
எப்போது பார்த்தாலும் மட்டம் தட்டும் தந்தை, குறை சொல்லும் சகோதரிகள் இருந்தாலும் அன்பான கணவர் விதார்த், பாசமிகுந்த மகனுடன் குடும்பத்தலைவியாக வாழ்ந்து வருகிறார் ஜோதிகா. இருப்பினும் வேலைக்கு செல்லும் மற்ற பெண்களை பார்க்கும்போது தனக்கும் வேலைக்கு போகவேண்டும் என்ற ஏக்கம் அவர் மனதில் இருக்கும். இந்த நிலையில் தற்செயலாக ஒரு எப்.எம் வானொலியில் நைட்ஷிப்ட் ஆர்ஜேவாக பணிபுரியும் வேலை கிடைக்கின்றது. இரவு நேர நிகழ்ச்சி என்றாலே பலான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற தயக்கம் காரணமாக விதார்த் மனதில் ஒரு ஐயம் எழுகிறது. அதுமட்டுமின்றி ஜோதிகா வேலைக்கு செல்வதால் குடும்பத்தில் வேறுசில பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனைகளை சமாளித்து தனக்கு மனதுக்கு பிடித்த வேலையை ஜோதிகா தொடர்ந்தாரா? அல்லது குடும்பத்திற்காக வேலையை துறந்தாரா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை ஆகும்.
கடந்த 2000ஆம் ஆண்டுகளில் ஜோதிகா ஹீரோயினியாக நடித்தபோது இருந்த அலட்டல் நடிப்பு முதல் பாதியில் எட்டிப்பார்த்தாலும், ஆர்ஜே வேலை கிடைத்த பின்னர் அவருடைய நடிப்பில் மெச்சூரிட்டி தெரிகிறது. தனது வேலை குறித்து கணவருக்கு புரிய வைப்பது, தன்னை மட்டம் தட்டும் சகோதரிகள், தந்தையிடம் சீறுவது, மகனிடம் பாசத்தை பொழிவது, வித்யார்த்துடன் அன்னியோகமாக இருப்பது என படம் முழுவதும் ஜோதிகாவின் ராஜ்யம்தான். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 'வித்யாபாலனுக்கு தான் எந்தவிதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். ஜோதிகா கூறும் அந்த 'ஹலோ' என்ற வார்த்தை இன்னும் காதில் ஒலித்து கொண்டே இருப்பதே அவரது நடிப்புக்கு கிடைத்த வெற்றி
'36 வயதினிலே' படம் முதல் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்த நடிகர்களின் கேரக்டர்கள் ஏனோதானோ என்று உருவாக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தில் விதார்த் கேரக்டர் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. விதார்த் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிவதால் இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எப்.எம் வானொலியின் மேனேஜராக நடித்திருக்கும் லட்சுமி மஞ்சுவுக்கு நடிக்க கிடைத்த நல்ல வாய்ப்புகளை மிஸ் செய்யவில்லை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு முன் வேலை விஷயமாக ஜோதிகா எடுக்கும் முடிவால் அதிரும் காட்சியும் அதன் பின்னர் லட்சுமி மஞ்சு சமாளிக்கும் காட்சியும் அருமை.
எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் தனது குணசித்திர நடிப்பையும், மனோபாலா வழக்கம்போல் தனது இரட்டை அர்த்த காமெடியுடனும் நடித்துள்ளனர். மயில்சாமி வரும் ஒருசில காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி.
ராதாமோகன் படம் என்றாலே இளங்கோ குமாரவேலுக்கு நிச்சயம் ஒரு காமெடியுடன் கூடிய ஒரு குணசித்திர கேரக்டர் இருக்கும். அந்த வகையில் இந்த படத்திலும் அவர் தனக்கு கொடுத்த கவிஞர் வேடத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
யோகிபாபுவின் சிறப்பு தோற்றம் காமெடிக்கு கியாரண்டி என்றால், சிம்புவின் சிறப்புத்தோற்றம் நெகிழ்ச்சிக்கு கியாரண்டி. ஜோதிகாவிடம் சிம்பு ஆட்டோகிராப் வாங்கும் காட்சி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
ஏ.எச்.காசிப் இசையில் 'கிளம்பிட்டாளே விஜயலட்சுமி' என்ற பாடல் கேட்கும் வகையில் உள்ளது. மற்ற பாடல்கள் படத்தில் வலிய திணித்தது போல் உள்ளது. அதேபோல் பின்னணி இசையும் கதையின் போக்கிற்கு கச்சிதமாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் கேமிரா ஒகே ரகம். எடிட்டர் பிரவீண் முதல் பாதியில் சில தேவையற்ற காட்சிகளை கத்தரி போட்டிருக்கலாம்.
'துமாரி சூளு' படத்தின் ரீமேக் என்றாலும் தமிழுக்கு ஏற்றாவாறு இயக்குனர் ராதாமோகன் செய்த மாற்றங்கள் அருமை. அதேபோல் எப்.எம் வானொலியில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜோதிகா கேரக்டர் மூலம் இயக்குனர் கூறிய புத்திசாலித்தனமான் அறிவுரைகள் சிறப்பு. குறிப்பாக பல தற்கொலைகளை பார்த்த ரயில் டிரைவர் கேட்ட கேள்விக்கும், உள்ளாடை கடையில் வேலை பார்க்கும் ஒருவர் கேட்ட கேள்விக்கும் ஜோதிகா கூறிய பதில் ஆச்சரியத்தை அளித்தது.
இருப்பினும் ஜோதிகாவுக்கு எப்.எம்.வானொலியில் வேலை கிடைக்கும் வரை வரும் காட்சிகள் படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் துண்டுதுண்டாக உள்ளது. விதார்த்-ஜோதிகா தம்பதி கேரக்டர்களை முதல்பாதியில் அந்த அளவுக்கு அன்னியோன்யமாக காண்பித்துவிட்டு பின்னர் இரண்டாம் பாதியில் திடீரென சந்தேகப்படுவது போன்று வரும் காட்சி செயற்கையாக உள்ளது. உமா பத்மனாபன் கேரக்டரை எம்.எஸ்.பாஸ்கருடன் இணைக்கும் காட்சி வரும் என்ற எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றம்தான் கிடைத்தது.
மொத்தத்தில் மனசுக்கு பிடிச்ச வேலை பார்ப்பது கொடுப்பினை' என்ற முக்கிய கருத்தை அழுத்தமாக கூறிய இந்த படத்தை அனைத்து தம்பதிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
- Read in English