'காப்பான்' : ரசிகர்களை கவர்வான்
சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் 'அயன்' மற்றும் 'மாற்றான்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவதாக இருவரும் இணைந்துள்ள படம் தான் 'காப்பான்'. ரிலீசுக்கு முன்னர் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா? என்பதை பார்ப்போம். பிரதமரை கொலை செய்ய நினைக்கும் கும்பலுக்கும் பிரதமரை காப்பாற்றும் தனிப்படை அதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் போர் தான் இந்த 'காப்பான்' படத்தின் ஒருவரி கதை.
பிரதமர் சந்திரகாந்த் வர்மா (மோகன்லால்) நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். ஆனால் அரசாங்கத்தையே தன் கையில் வைத்திருக்கும் தொழிலதிபர் (பொமன் இரானி) ஒருவர், ஆளுங்கட்சியின் எம்பிக்களை கையில் வைத்து கொண்டு பல காரியங்களை சாதித்து வருகிறார். அவ்வாறு தொழிலதிபரின் ஒரு திட்டத்திற்கு பிரதமர் மோகன்லால் ஒப்புக்கொள்ளாததால் அவரை தீர்த்து கட்டிவிட்டு அந்த இடத்தில் தனது ஆளை பிரதராக்கி சாதித்து கொள்ள நினைக்கின்றார் அந்த தொழிலதிபர். இதற்கு ஒருசில அமைச்சர்களும் உதவி செய்கின்றனர். அவரது எண்ணம் ஈடேறியதா? பிரதமரின் பாதுகாப்பு படையில் இருக்கும் சூர்யா பிரதமரை காப்பாற்றினாரா? என்பதுதான் மீதிக்கதை
பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரியாக கதிர் என்ற கேரக்டரில் கச்சிதமாக நடித்துள்ளார் சூர்யா. வழக்கம்போல் அவர் தனது அதிகபட்ச உழைப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் விறுவிறுப்பு அதிகம். ஆங்காங்கே தற்கால அரசியல், விவசாயம் குறித்த வசனங்களும் சாயிஷா, சமுத்திரக்கனியுடன் இரட்டை அர்த்த வசனங்களும் பேசுகிறார். சாயிஷாவுடன் ரொமான்ஸ் காட்சி படத்திற்கு தேவையில்லாதது என்றாலும் குறைவான ரொமான்ஸ் காட்சி இருப்பது ஒருவகை ஆறுதல்
இந்திய பிரதமரை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார் மோகன்லால். வழக்கம்போல் மிகைப்படுத்தாத நடிப்பு. 100 பேர்களின் ஆபத்தை தடுக்க ஒருவரின் உயிரை எடுப்பது தவறில்லை என்பதை கூறுவது மட்டுமின்றி நாட்டு மக்களுக்காக தன்னுடைய உயிர் போகும் நிலையிலும் அதே கொள்கையில் இருப்பது அவரது கேரக்டர் மீது மதிப்பை வரவழைக்கின்றது.
ஆர்யாவின் கேரக்டர் முதல் பாதி ஜாலியாகவும், பின்பாதியில் பதவி வந்ததும் ஜாலி மற்றும் சீரியஸ் என இரண்டும் கலந்தும் வருகிறது. குறிப்பாக தொழிலதிபர் பொமன் இரானியுடன் ஆர்யா நடத்தும் பேச்சுவார்த்தையும் அவரது நக்கலான வசனங்களையும் தொழிலதிபரை வெறுப்பேத்துவதும் கைதட்டலை பெறும் காட்சிகள்
சாயிஷா பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் முக்கிய நபராக அறிமுகம் செய்யப்படுகிறார். ஆனால் வழக்கமான தமிழ் சினிமா போல் இந்த படத்திலும் கதாநாயகிக்கு கதைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. சாயிஷாவின் கேரக்டரையும் வில்லன் போல் இயக்குனர் காட்ட முயற்சித்துள்ளார்.
சமுத்திரக்கனி கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். அவருக்கும் ஒரு ரொமான்ஸ் காட்சியை வைத்து கடுப்பேற்றியுள்ளார் இயக்குனர். சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பூர்ணா ஒரே ஒரு காட்சியில் மட்டும்.
ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் 'சிறுக்கி' மற்றும் 'விண்ணில் வின்மீன்' ஆகிய பாடல்கள் ஓகே என்றாலும் பாடல்கள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கின்றது என்பது உண்மை. ஒரு வழக்கமான ஆக்சன் கதைக்கேற்ற பின்னணி இசையமைத்துள்ளார் ஹாரீஸ் ஜெயராஜ்
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் சூப்பராக உள்ளது. ஆக்சன் காட்சிகளிலும் கேமிரா புகுந்து விளையாடியுள்ளது. இரண்டே முக்கால் மணி நேர படம் என்பது அதிக நீளம். எடிட்டர் படத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் பல காட்சிகளை வெட்டியிருக்கலாம்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் 'அயன்', 'மாற்றான்' ஆகிய படங்களின் பாணி இந்த படத்திலும் உள்ளது. ஆங்காங்கே சின்னச்சின்ன டுவிஸ்ட், சின்ன சின்ன திருப்பங்கள் இருந்தாலும் அவை எளிதில் ஊகிக்கும் வகையில் உள்ளது. வில்லன் கேரக்டரான தொழிலதிபர் பொமன் இரானியின் கேரக்டர் படுவீக்காக உள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் பாணி படத்தில் திடீரென ஆர்கானிக் விவசாயம் குறித்து சூர்யா பாடம் நடத்துவது தேவையா? என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் சூர்யா, ஆர்யா, பொமன் இரானி மீட்டிங் காட்சி சூப்பர். ’என் பேக்ட்ரியை மூடினார் என்பதற்காக எத்தியோப்பியா நாட்டின் பிரதமரையே தூக்கினேன் என்று வில்லன் கூற அதற்கு சூர்யா, 'இந்தியா எத்தியோப்பியா அல்ல' என்று பதிலடி கொடுக்கும் காட்சி ரசிக்க வைக்கின்றது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தஞ்சை விவசாயிகள், போராட்டம், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல் என சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை இயக்குனர் படத்தில் தேவையில்லாமல் திணித்துள்ளதாக தெரிகிறது. பூச்சிகள் மூலம் பயிர்களை கொல்லும் காட்சி தமிழ் சினிமாவுக்கு புதிது.
மொத்தத்தில் சூர்யா, ஆர்யாவின் சிறப்பான நடிப்பு, மற்றும் ஆக்சன் காட்சிகளுக்காக பார்க்கலாம்.
Comments