Download App

Kaali Review

காளி: மீண்டும் அம்மாவுக்காக ஒரு பயணம்

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது முதல் படமான 'நான்' படத்தில் இருந்தே வித்தியாசமான கதையை தேர்வு செய்து தனக்கேற்ற கேரக்டரில் நடித்து வருபவர். குறிப்பாக அவருடைய 'பிச்சைக்காரன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி பெரிய நடிகர்களையே ஆச்சரியப்பட வைத்தது. அதேபோல் 'வணக்கம் சென்னை' என்ற வெற்றி படத்தை கொடுத்த கிருத்திகா உதயநிதி, தனது இரண்டாவது படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்த இந்த  'காளி' திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

அமெரிக்காவில் பெற்றோர்களுடன் டாக்டராக இருக்கும் விஜய் ஆண்டனி, அவர்கள் தன்னை பெற்றெடுத்த பெற்றோர் இல்லை, தத்தெடுத்தவர்கள் என்பதை அறிந்து கொள்கிறார். அவர்களுடைய சம்மதத்துடன் தன்னை பெற்றவர்களை தேடி இந்தியா வருகிறார். தன்னை தத்து கொடுத்த அனாதை ஆசிரமம் சென்று சில விபரங்களை திரட்டியதில் தன்னுடைய தாயார் பெயர் பார்வதி என்பதை கண்டுபிடித்த பின் தனது தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அவரது முயற்சி வெற்றி அடைந்ததா? அவருடைய தந்தை யார்? அவரை விஜய் ஆண்டனி என்ன செய்தார்? என்பதுதான் மீதிக்கதை

விஜய் ஆண்டனி இந்த படத்தில் முதல்முறையாக பல கெட்டப்புகளை முயற்சி செய்துள்ளார். டாக்டர், பாதிரியார், திருடன், கல்லூரி மாணவர் போன்ற கெட்டப்புகளில் வந்தாலும் முகபாவனை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. எல்லா கேரக்டர்களுக்கும் ஒரே மாதிரி டயலாக் பேசுவதை விஜய் ஆண்டனி தவிர்த்திருக்கலாம். மற்றபடி விஜய் ஆண்டனியின் வழக்கமான அம்மா செண்டிமெண்ட் நடிப்பு இந்த படத்திலும் உள்ளது

அஞ்சலி இந்த படத்தில் கிராமத்து டாக்டராக வருகிறார். இவருடைய கேரக்டர் இந்த படத்தில் எதற்கு? என்ற கேள்விக்கு கடைசி வரை விடை கிடைக்கவில்லை. சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர்களும் விஜய் ஆண்டனிக்கு ஜோடிகள் தான். சுனைனா கேரக்டருக்கு மட்டும் கொஞ்சம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

நாசர், ஜெயப்பிரகாஷ், மதுசூதனராவ் ஆகியோர்கள் விஜய் ஆண்டனியின் அப்பாவாக இருக்குமோ என்று பார்வையாளர்களை நம்ப வைக்க உருவாக்கப்பட்ட கேரக்டர்கள். மூவருக்குமே நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. வேலராமமூர்த்தி வழக்கம் போல் கிராமத்து வில்லனாகவும், அவருக்கு அடியாளாக வழக்கம்போல் உறுமுபவராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஒரே ஆறுதல் யோகிபாபு. தனியாக காமெடியில் ஜமாய்த்திருக்கின்றார். தியேட்டர் கொஞ்சமேனும் கலகலப்பாக இருப்பதற்கு இவர் ஒருவர் மட்டுமே காரணம்

விஜய் ஆண்டனியின் இசையில் அனைத்து பாடல்களும் பழைய ரகம். ரசிக்கும் வகையில் இல்லை. பாடல் படம்பிடிக்கப்பட்ட விதத்திலும் புதுமை இல்லை. பின்னணி இசையும் சுமார்தான். ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் மற்றும் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் ஆகியோர் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர்.

இயக்குனர் கிருத்திகா உதயநிதி முதல் அரை மணி நேர படத்தை எதிர்பாக்கும் வகையில் கொடுத்துவிட்டு பின்னர் தான் போட்ட முடிச்சுகளை அவிழ்க்க திணறியுள்ளார். விஜய் ஆண்டனியின் அப்பா இவரா? அவரா? என்று ஆடியன்ஸ்களை குழப்பியதில் மட்டும் வெற்றி அடைகிறார். ஆனால் கதையை நகர்த்தி செல்லும் பிளாஷ்பேக் காட்சிகள் சுவாரஸ்யமாக இல்லை. முடிவில் அப்பா யார் என்று தெரிந்தும் அவரிடம் நான் தான் உங்கள் மகன் என்று விஜய் ஆண்டனி காட்டி கொள்ளாமல் இருக்க கூறப்பட்டிருக்கும் காரணம் ஏற்று கொள்ளும் வகையில் இல்லை

மொத்தத்தில் அம்மா செண்டிமெண்ட் மற்றும் யோகிபாபு காமெடிக்காக ஒருமுறை பார்க்கலாம்

 

Rating : 2.5 / 5.0