Download App

Kaala Review

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது. ஆனால் இந்த படம் அதற்கும் மேல். அரசியல் அறிவிப்புக்கு பின்னர் வெளிவரும் முதல் ரஜினி படம், 'கபாலி' வெற்றிக்கு பின்னர் மீண்டும் ரஞ்சித்துடன் ரஜினி இணைந்த படம், சமிபத்தில் போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு முரண்பாடான படம் என்ற வகையில் இந்த படம் எதிர்ப்பார்ப்பின் உச்சத்திற்கு சென்றது. ரஜினி படத்திற்கும் மற்ற படத்திற்கும் உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசம், ரஜினி படம் அவரது ரசிகர்களையும் குடும்ப ஆடியன்ஸ்களான பொதுவான பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த படம் உள்ளதா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

இந்த படத்தின் கதை ஏற்கனவே நாம் கேள்விப்பட்ட ஒரே ஒரு லைன் கதைதான். மும்பையின் இதயப்பகுதியில் இருக்கும் பல ஏக்கர் கொண்ட சேரிப்பகுதியான தாராவியை தனது அதிகாரத்தால் கைப்பற்ற நினைக்கும் அதிகாரம் மிக்க ஒருவருக்கும், அந்த மக்களை அதிகாரமிக்கவரிடம் இருந்து காக்கும் காவலன் ஒருவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்த படத்தின் கதை. இந்த போராட்டத்தில் இருதரப்பிலும் ஏற்படும் இழப்புகள், சதிகள், அரசியல், சகுனித்தனங்கள் ஆகியவையே திரைக்கதை. முடிவு என்ன என்பது அனைவரும் அறிந்தது என்றாலும் அந்த முடிவு எந்த வகையில் கிடைத்தது என்பதை அறிய வைக்க்கும் படம் தான் இந்த 'காலா'.

'காலா' என்ற தாராவியின் மக்களை காக்கும் மனிதக்கடவுள் கேரக்டர் ரஜினிக்கு. அவருடைய நீண்ட அனுபவம் இந்த படத்தில் அந்த கேரக்டரை எந்தவித உறுத்தலும் இல்லாமல் திரைக்கு கொண்டுபோய் சேர்க்கின்றது. தன் மக்களை காக்க அவர் எடுக்கும் முயற்சிகள், மனைவியிடம் ரொமான்ஸ் மற்றும் கொஞ்சல், முன்னாள் காதலியை சந்திக்கும்போது ஏற்படும் மெல்லிய காதல் உணர்வுகள், வில்லனுடன் மோதும்போது காட்டும் வெறித்தனம், குழந்தைகளிடம் காட்டும் அன்பு கலந்த கண்டிப்பு என 'காலா' கேரக்டராகவே வாழ்ந்துவிட்டார் ரஜினிகாந்த். இருப்பினும் ரஜினியின் அட்டகாசமான எண்ட்ரி மற்றும் மாஸ் காட்சிகள் இந்த படத்தில் மிஸ்ஸிங் என்பது ஒரு குறையாகவே உள்ளது. ஆனாலும் 'யாருப்பா இவரு? என்று திரும்ப திரும்ப ரஜினி கேட்கும் காட்சி உச்சகட்ட மாஸ் காட்சியாக எடுத்து கொள்ளலாம்.

'காலா'வின் மனைவியாக வரும் செல்வி என்ற கேரக்டர் ஈஸ்வரிராவுக்கு. இவரை இத்தனை வருடங்களாக தமிழ்த்திரையுலகம் பயன்படுத்தாமல் விட்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பு. ரஜினி படத்தில் ரஜினியை தவிர இன்னொருவர் கைதட்டல் பெற முடியும் என்பது அபூர்வமாக நடக்கும் விஷயம். ஆனால் ஈஸ்வரிராவ் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் கைதட்டல் கிடைத்திருப்பது அவருக்கு மட்டுமின்றி இயக்குனருக்கும் ஒரு வெற்றியே.

இன்னொரு நாயகியான ஹூமா குரோஷி, ரஜினியின் முன்னாள் காதலியாகவும், பின்னர் திடீரென நீலாம்பரி போன்ற கேரக்டராகவும், பின் மீண்டும் காலாவுக்கு ஆதரவாளராகவும் மாறுவது முரண்டாக தெரிகிறது. எனினும் இவரது நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

ஈஸ்வரிராவை அடுத்து மனதில் நிற்பவர் சமுத்திரக்கனி. ரஜினிக்கு உறவினராக வரும் இவருடைய நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதேபோல் 'வத்திக்குச்சி' திலீபன். சாயாஜி ஷிண்டே, சம்பத்ராஜ், அருள்தாஸ், அஞ்சலி பட்டேல் ஆகியோர்களின் கேரக்டர்கள் படத்தின் கதையோடு ஒன்றியிருப்பதால் அனைத்து கேரக்டர்களும் மனதில் நிற்கின்றது.

நானாபடேகருக்கு இடைவேளைக்கு பின்னர்தான் வேளை என்றாலும் பிற்பாதியில் ரஜினிக்கு சவால் விடும் அமைதியான வில்லன் கேரக்டர். ஒரு திறமையான நடிகரான இவரை இயக்குனர் இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். 

 

சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகிவிட்ட நிலையில், இந்த படத்தில் ஒரு புரட்சி படத்திற்கு ஏற்ற பின்னணி இசையை கொடுத்து இயக்குனரை திருப்திபடுத்தியுள்ளார். முரளியின் கேமிராவில் தாராவின் ஸ்லம் பகுதி அப்படியே கண்முன் நிற்கின்றது. ஆனால் ஒருசில செட்டுக்கள்  செயற்கையாக இருப்பதை தவிர்த்திருக்கலாம். ஸ்ரீகர் பிரசாத் இன்னும் கொஞ்சம் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம், ஆனால் அது அவருடைய தவறல்ல, இயக்குனர் அனுமதித்தால்தானே.

ஆக்சன் ரசிகர்களை திருப்திப்படுத்த பாட்ஷா படத்தை ஞாபகப்படுத்தும் வகையில் ஒரு பாலம் சண்டைக்காட்சி மற்றும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளை குறிப்பிடலாம். ஆனாலும் நானாபடேகர், ரஜினி மோதும் காட்சிகள் இருந்திருந்தால் ஆக்சன் பிரியர்களை திருப்தி செய்திருக்கலாம். குறிப்பாக அமைச்சர் ஏற்பாடு செய்த ரஜினி-நானாபடேகர் மீட்டிங் காட்சியில் ரசிகர்கள் நிச்சயம் ஒரு சண்டைக்காட்சியை எதிர்பார்த்திருப்பார்கள். அது மிஸ்ஸிங் என்பது ஒரு குறையே.

இயக்குனர் ரஞ்சித், மீண்டும் ஒருமுறை ரஜினியை இயக்க வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற எண்ணத்தில் தன்னுடைய மொத்த புரட்சி கருத்தையும் இந்த படத்தில் கொட்டிவிட்டார். ரஜினி படத்தில் தன்னுடைய கருத்தை கூறினால்தான் அது பெரிய அளவில் ரீச் ஆகும் என்பதை நன்கு புரிந்து கொண்டு அதே நோக்கத்தில் செயல்பட்டுள்ளார்.  நிலம் எங்கள் உரிமை' என்பது ஓகே தான். ஆனால் இடைவேளைக்கு பின்னர் படம் ஒரே புரட்சியும் போராட்டமுமாக இருப்பதால் டாக்குமெண்டரி பிலிம் போல் உள்ளது. ரஜினி சமீபத்தில் கூறியது போல் 'ஒரே போராட்டம் என்றால் எப்படி? அதேபோல் ரஜினி படத்தில் ரஜினியின் மாஸ் மிஸ் ஆவதை ரஜினி ரசிகர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஆனாலும் தான் சொல்ல வந்த விஷயத்தை கச்சிதமாக சொல்லி முடித்ததில் ஒரு இயக்குனராக அவர் வெற்றி பெற்றுவிட்டார். மேலும் முதல் பாதியில் ரஜினியின் குடும்ப காட்சிகள் மனதை கவரும் வகையில் உள்ளது. இப்படி ஒரு அன்பான குடும்பம் நமக்கும் இருக்கலாமே என்று ஏங்கும் அளவுக்கு ரசிக்கத்தக்க காட்சிகள். மேலும் பொதுவான ஆடியன்ஸ்கள் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் இது ரஜினி படம் அல்ல, ரஞ்சித் படம் என்று கூறும் அளவுக்கு அவர் தன்னை முன்னிலைப்படுத்துவதில் வெற்றியும் பெற்றுவிட்டார். ரஞ்சித்துக்கு கிடைத்த இந்த வெற்றி தயாரிப்பாளருக்கும் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

கடைசியாக ஒரு விஷயம். தெரிந்தோ தெரியாமலோ இந்த படத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அதே போன்ற போராட்டம், துப்பாக்கி சூடு, துப்பாக்கி சூடு எதனால் போன்ற காட்சிகள் படத்தின் கதைப்படி வெற்றி என்றாலும் ரஜினியின் சமீபத்திய கருத்துக்களை ஓப்பிட்டு பார்த்தால் பெரும்பாலானோர்களுக்கு ஒரு மைனஸ் ஆக தோன்றுவதை தவிர்க்க முடியாது. ரஜினியின் சமீபத்திய தூத்துகுடி விசிட்டை மனதில் இருந்து ஒரேயடியாக அழித்துவிட்டு இந்த படத்தை பார்ப்பது நல்லது. ஆனால் அது முடியுமா? என்று தெரியவில்லை.

மொத்தத்தில் 'காலா' ஒரு புரட்சிப்படமாக நிச்சயம் வெற்றிதான். ஆனால் இந்த படம் எத்தனை பேர்களுக்கு புரியும் என்பதில்தான் இந்த படத்தின் வெற்றி உள்ளது.

Rating : 3.0 / 5.0