'காலக்கூத்து': பிரியா நட்பும் அழியா காதலும்
நீண்ட காலமாக கிடப்பில் இருந்த கலையரசன், பிரசன்னா நடித்த 'காலக்கூத்து' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. காதல், நட்பு குறித்த படங்கள் என்றாலே கோலிவுட்டில் வெற்றிப்படங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்
பிரசன்னா, கலையரசன் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பள்ளி பருவத்திலேயே அம்மா, அப்பா இழந்து, தாத்தாவின் கவனிப்பில் வளர்ந்து வரும் பிரசன்னாவுக்கு, அம்மாவை இழந்த கலையரசன் மீது அனுதாபம் ஏற்படுகிறது. அந்த அனுதாபத்தால் நெருக்கமாகும் இருவரின் நட்பு இளைஞர் காலம் வரை நீண்டு வருகிறது.
இந்த நிலையில் ஒருபுறம் கலையரசன், தன்ஷிகாவை காதலிக்க, ஸ்ருஷ்டி டாங்கே இன்னொருபுறம் பிரசன்னாவை காதலிக்கின்றார். ஆனால் திடீரென இருவரின் காதலிலும் பிரச்சனைகள் முளைக்கின்றன. பிரச்சனைகளை சமாளித்து காதலர்கள் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை
மெட்ராஸ் முதல் கபாலி வரை சின்ன கேரக்டரோ, பெரிய கேரக்டரோ தனது நடிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர் கலையரசன். ஹரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். நட்பு, காதல், சோகம், ஆக்சன் என அவரது நடிப்பிற்கு தீனி போட பல காட்சிகள் இருப்பதால் இந்த படம் கலையரசனுக்கு மறக்க முடியாத படங்களில் ஒன்றாக இருக்கும்
எப்போதும் சோக முகத்துடன் இருக்கும் பிரசன்னா இந்த படத்தின் ஈஸ்வர் என்ற கேரக்டருக்கு சற்று பொருத்தமில்லாமல் இருக்கின்றார். அவரது வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். இளம் நடிகர் அல்லது புதுமுக நடிகரை இந்த கேரக்டருக்கு இயக்குனர் தேர்வு செய்திருந்தால் இந்த கேரக்டர் இன்னும் பேசப்பட்டிருக்கும். இருப்பினும் பிரசன்னா தனது நடிப்பில் குறை வைக்கவில்லை
'கபாலி' படத்தில் பார்த்த ஆக்சன் தன்ஷிகாவா இது என்று சொல்லும் அளவுக்கு கல்லூரி பெண்ணாக கலக்கியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்புக்கு ஒரு பெரிய கைதட்டலை கொடுக்கலாம்.
கன்னக்குழியுடன் காட்சி தரும் ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு வாய்ப்பு குறைவென்றாலும் மனதில் பதிகிறார்.
மேலும் பிரசன்னா, கலையரசன் நண்பராக வரும் பாண்டிரவி ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கின்றார். மனோகர், மகேந்திரன், ராஜலட்சுமி ஆகியோர்கள் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர்.
இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாடல்கள் என்று கூறலாம். அனைத்து பாடல்களும் இசைஞானியின் பாடல்களை கேட்பது போன்ற இனிமையான மெலடிகள். பின்னனி இசையிலும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் குறை வைக்கவில்லை
ஷங்கரின் ஒளிப்பதிவும், செல்வா படத்தொகுப்பும் படத்தின் மேலும் இரண்டு பிளஸ்கள்
இயக்குனர் நாகராஜன் ஆழமான நட்பு, உண்மையான காதல் ஆகிய இரண்டையும் சேர்த்து திரைக்கதை அமைத்துள்ளார். பெற்றோருக்கு கட்டுப்பட்டு கைவிடும் காதல் ஒன்றையும், பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்யும் காதல் ஒன்றையும் கூறி இந்த இரண்டு காதல்களின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதையும் கூறுவதோடு, இந்த இரண்டில் எது சரியானது என்பதை படம் பார்ப்பவர்களே புரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் இந்த படத்தின் காட்சிகளின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும் கலையர்சன், தன்ஷிகாவின் காதல் காட்சிகள் இருபது வருடங்களுக்கு முன் வந்த படங்களை ஞாபகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம். முதல் பாதியின் பல காட்சிகள் இன்றைய இளைஞர்களுக்கு போரடிக்கும் காட்சிகளாகவும், அதே நேரத்தில் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களது இளமைக்காலங்களை நினைவு கொள்ளும் காட்சிகளாகவும் உள்ளன. கடைசி பத்து நிமிட கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் நாகராஜனின் உழைப்பு தெரிகிறது.
மொத்தத்தில் கலையரசன், தன்ஷிகா நடிப்பு, பாடல்கள் ஆகியவற்றுக்காக ஒருமுறை தாராளமாக இந்த படத்தை பார்க்கலாம்
Comments