'காலா கரிகாலன்' படத்தலைப்பு. சென்னை கமிஷனர் ஆபீசில் புகார்
- IndiaGlitz, [Tuesday,May 30 2017]
ரஜினிகாந்த் உள்பட பெரிய நடிகர்கள் படம் என்றாலே வழக்குகளை சந்திக்காமல் வெளிவந்ததில்லை என்பது கோலிவுட்டின் எழுதப்படாத வரலாறு. கதை, டைட்டில் உள்பட பல பிரச்சனைகள் படம் ஆரம்பித்தது முதல் ரிலீசுக்கு முந்தைய நாள் வரை வந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வரும் 'காலா கரிகாலன்' படத்தின் தலைப்பு, கதை, அனைத்தும் தன்னுடையது என்றும், அவருடைய கதையை 'காலா' படக்குழுவினர் திருடி விட்டதாகவும் ராஜசேகரன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், 'கடந்த 1995, 1996ஆம் ஆண்டுகளில் 'கரிகாலன்' என்ற தலைப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்தேன். இதற்காக ஒருமுறை ரஜினியையும் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் புகைப்படம் மட்டும் எடுத்து கொண்டு படம் குறித்து இன்னொரு நாளில் பேசலாம் என்று கூறிவிட்டார்.
நான் 'கரிகாலன்' டைட்டிலை முறைப்படி பதிவு செய்துள்ளேன். இந்த படத்தை தயாரிக்க நான் பலவித முயற்சிகள் செய்து கொண்டிருந்தபோது இதே டைட்டிலில் சீயான் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவிருப்பது தெரிய வந்தபோது அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.
இந்த நிலையில் தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா கரிகாலன்' என்ற படம் உருவாகுவதாக விளம்பரங்களில் இருந்து தெரிந்து கொண்டேன். இதனை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்து, தீராத மன உலைச்சல் அடைந்துள்ளேன். என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும், கதியின் மூலக்கருவினையும் நடிகர் தனுஷ், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர்கள் திருடி 'கரிகாலன்' என்ற என்னுடைய தலைப்பை 'காலா கரிகாலன்' என்றும் என்னுடைய கதையையும் கதையின் மூலக்கருவையும் மறுவடிவமைத்து செய்து ரஜினிகாந்த் அவர்களை வைத்து படத்தை துவக்கியுள்ளனர். இதனால் காவல்துறை ஆணையர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என ராஜசேகரன் தனது புகாரில் கூறியுள்ளார்.