இஸ்ரோ தலைவராக முதன்முதலாக தமிழர் நியமனம்
- IndiaGlitz, [Thursday,January 11 2018]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக முதன்முதலாக தமிழரான கே.சிவன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக பணிபுரிந்து வரும் கிரண்குமார் நாளையுடன் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைவராக தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த கே.சிவன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு தற்போது பிறப்பித்துள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையல் என்ற கிராமத்தில் விவசாயி மகனாக பிறந்த சிவன், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் கடந்த 1980ஆம் ஆண்டு பட்டம் பெற்ற கே.சிவன் அவர்கள், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.
நாளை முதல் இஸ்ரோவின் தலைவராக கே.சிவன் பதவியேற்கிறார். இந்த பதவியில் அமரும் முதல் தமிழர் இவர் என்பதால் தமிழகமே இவருடைய நியமனத்தை கொண்டாடி வருகிறது. குறிப்பாக அவருடைய சொந்த ஊரில் உள்ள பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.