முதியவருக்கு 10 மாதத்தில் 43 முறை கொரோனா பாதிப்பு? பீதியைக் கிளப்பும் கோரச் சம்பவம்!
- IndiaGlitz, [Saturday,June 26 2021]
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கடந்த 10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மருத்துவர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் 305 நாட்களுக்குப் பிறகு அவர் தற்போது கொரேனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்னார் என்பதும் பலருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டாலை சேர்ந்தவர் ஓட்டுநர் டேவ் ஸ்மித். 72 வயதாகும் இவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாசிடிவ் வந்து இருக்கிறது. மேலும் கொரோனா பாதிப்புக்கு முன்பாகவே இவருக்கு லுகாமியா மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் வந்த கொரோனா பாசிடிவ் அதற்குப் பின்பு 43 முறை பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் இதனால் அவர் 7 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஸ்மித் இறந்துவிடுவார் என்று நினைத்து அவரது குடும்பத்தினர் பலமுறை இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்த அவலமும் நடந்து இருக்கிறது. ஆனால் 43 முறை பாசிடிவ் ரிசல்ட் வந்த பிறகும் ஸ்மித் தற்போது 305 நாட்களைக் கடந்து கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து அச்சம் தெரிவிக்கும் மருத்துவர்கள் ஸ்மித்தின் உடலில் கடந்த 305 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் இருந்து இருக்கிறது. ஆனால் அந்த வைரஸ் அவரது உடலில் எங்கிருந்தது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் நோய்த்தொற்றில் இருந்து நீண்டநாட்களாக மீண்டு வராததால் இறுதியாக ரீஜெனரைன் எனும் நிறுவனம் தயாரித்த செயற்கை கொரோனா ஆன்டிபாடிகளை 45 நாட்கள் தொடர்ந்து அவருக்கு கொடுத்தோம். அதற்கு பிறகுதான் ஸ்மித்திற்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது.
இந்நிலையில் ஒரு மனிதனது உடலில் 305 நாட்கள் கொரோனா வைரஸ் இருந்தது குறித்து விஞ்ஞானிகள் கடும் குழப்பம் அடைந்து உள்ளதாகவும் இதுகுறித்து மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.