இந்த மாதிரி டைரக்டர் எல்லாம் ஒருநாளும் தேற மாட்டார்கள்: கே.பாக்யராஜ் பரபரப்பு பேச்சு
- IndiaGlitz, [Saturday,January 04 2020]
சமீபத்தில் கோலிவுட் திரையுலகில் கதைத்திருட்டு விவகாரம் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு திரைப்படம் வெளியாகவிருக்கும் கடைசி நேரத்தில் திடீரென ஒருவர் கிளம்பி இந்த படம் எனது கதை என எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுப்பது, நீதிமன்றம் செல்வது என பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் இந்த பிரச்சனை மாஸ் நடிகர்களின் படங்களுக்கு அதிகம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பிரபல இயக்குனரும் எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான கே.பாக்யராஜ் கதைத்திருட்டு விவகாரம் குறித்து பேசியதாவது: இப்போது எல்லாம் கதைத்திருட்டு என்று சொன்னால் யாரும் ஒப்புக்கொள்வதில்லை. திருட்டு என்று கூடச் சொல்லாமல் இதுவும், அதுவும் ஒத்துப் போகுது என்றுதான் சொன்னேன். சம்பந்தப்பட்டவரை கொச்சைப்படுத்தக் கூடாது, கவுரவக் குறைச்சலாக நடத்தக் கூடாது என்பதால் அப்படிச் சொல்லியும் கதைத்திருட்டு செய்தவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இந்த மாதிரி டைரக்டர்கள் ஒருநாளும் தேற மாட்டார்கள்’.
என்னதான் அடுத்தவர்களுடைய சட்டையை ஆல்ட்டர் செய்து போட்டாலும், பொருத்தமாக இருக்கும். ஆனால், அது பழைய சட்டைதான். எனவே வரும் தலைமுறையினர் கதைத்திருட்டை செய்யாதீர்கள். படத்தின் கதையைத் தழுவி என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் பண்ணினால் என்றைக்கும் தேறவே முடியாது. ரொம்ப நாள் நீடிக்கவும் முடியாது என்று கே.பாக்யராஜ் பேசியுள்ளார்.