நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கம்: காரணம் இதுதான்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு தமிழ் திரைஉலகில் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருந்தவர் கே பாக்யராஜ் என்பதும் இயக்குனர் மட்டுமின்றி அவர் இயக்கும் படங்களில் அவரே ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக சுவாமி சங்கரதாஸ் அணி என்று அமைத்து கே பாக்யராஜ் போட்டியிட்டார் என்பதும் இந்த தேர்தலில் கே பாக்யராஜ் அணி தோல்வியடைந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கொண்ட நடிகர் சங்க நிர்வாகிகள் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கே பாக்யராஜ் பரப்பி வந்ததாகவும் இதனால் அவரை நடிகர் சங்கத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று கடந்த சில வாரங்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் கே பாக்யராஜ் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் நடிகர் ஏ.எல். உதயா ஆகிய இருவரும் ஆறு மாதத்திற்கு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்கும், புதிய நிர்வாகிகள் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும் செயல்பட்டதால் கே பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.