குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்: மன்னிப்பு கேட்டார் கே.பாக்யராஜ்

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் இன்று காலை பேசிய நிலையில் தனது பேச்சுக்கு தற்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார் .

இன்று காலை பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் அந்த நூலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் பேசியபோது ’பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்துக் கூறினார்.

இந்த கருத்தை அடுத்து மாற்றுத்திறனாளிகளை கே.பாக்யராஜ் அவமதித்து விட்டதாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து கே.பாக்யராஜ் தற்போது தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கூறிய வார்த்தை யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் என்றும், எப்போதும் மாற்றுத்திறனாளிகள் மீது உயர்ந்த மரியாதை தனக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நான் திராவிட தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன் என்றும், நான் பாஜக இல்லை என்றும், என்னுடைய சினிமாவிலும் திராவிட இயக்க தலைவர்களின் கருத்துக்கள் இருக்கும் என்றும் இனியும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.