பா.ஜ.க. வில் இணையப் போகிறாரா??? மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா
- IndiaGlitz, [Tuesday,March 10 2020]
மத்தியப் பிரதேச அமைச்சரவையில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது. இந்த நிலையில் பா.ஜ.க. ஆட்சியை கலைக்க முயற்சித்து வருவதாக காங்கிரஸ் தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததும் குறிப்பிடத் தக்கது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங் பா.ஜ.க. பெரிய தொகையை காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கொடுக்க இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் நேற்று ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேருடன் பெங்களூர் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின. இதில் 6 பேர் அமைச்சர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இன்று காலை ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், சிந்தியா பிரமர் மோடியை நேரில் சென்று சந்தித்தும் இருக்கிறார். இதனால் சிந்தியா பா.ஜ.க. வில் இணையப் போகிறாரா என்ற சந்தேகம் வலுத்து இருக்கிறது. சிந்தியா வுடன் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து விலகும் பட்சத்தில் அம்மாநிலத்தின் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த முடிவிற்கு கடந்த 2018 இல் சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக பொறுப்பேற்று கொள்ள விரும்பினார், அதைக் காங்கிரஸ் மேலிடம் ஒப்புக்கொள்ளவில்லை எனக் காரணம் சொல்லப் பட்டு வருகின்றன.
மத்தியப் பிரதேச சட்டப் சபையின் மொத்த எண்ணிக்கை 230 ஆகும். அம்மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க 116 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 114 பேர் காங்கிரஸ், 2 பகுஜன் சமாஜ், ஒரு சமாஜ்வாதி, 4 பேர் சுயேட்சை எம்எல்ஏக்களும் அடங்குவர். பாஜகவுக்கு 104 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 2 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி காலியாக இருக்கிறது.
காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்களில் 17 குறையும் போது காங்கிரஸ் தனது ஆட்சியை தொடர முடியாத நிலைமைக்குத் தள்ளப்படும். சிந்தியா எடுக்கும் முடிவை பொறுத்து மத்தியப் பிரதேசத்தில் மாற்றம் வரக்கூடிய நிலைமை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.