ஜோதிகாவின் 'ராட்சசி' டிரைலர் விமர்சனம்
- IndiaGlitz, [Friday,May 31 2019]
தீமை நடைபெறும்போது அதை தடுக்காமல் அதன் கூடவே பயணிக்கின்றவர்கள் தீமையின் ஒரு பகுதியாகவே ஆகின்றனர், எதிர்த்து நிற்கின்றவர்களே வரலாறு ஆகின்றனர்' என்ற வசனத்தோடு இந்த படத்தின் டிரைலர் தொடங்குவதால் இதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதையாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஒரு பள்ளிக்கூடம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கும் ஒரு மோசமான பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேரும் ஜோதிகா, அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்கின்றார். சக ஆசிரியர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதால் அவர்களின் வெறுப்புக்கு ஆளாகிறார். இதையும் மீறி அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஜோதிகா நல்வழிப்படுத்துவதில் வெற்றி பெற்றாரா? என்பதுதான் இந்த படம்.
ஜோதிகா கறாரான ஆசிரியை வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். அவருடைய கெட்டப்பும் அவருடைய கேரக்டருக்கு மெருகேற்றியுள்ளது. ஒவ்வொரு வசனமும் ஈட்டிபோல் பாய்கிறது. இது என் ஊரு என்று மிரட்டும் லோக்கல் ரவுடியிடம் சோடா பாட்டிலை உடைத்து 'இது என் ஸ்கூலுன்னு' சொல்லும் கெத்து ஜோதிகாவுக்கு மட்டுமே வரும்.
ஷான் ரோல்டன் இசையும் கோகுல் பினாயின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக உள்ளது. இயக்குனர் கெளதம்ராஜ் ஒரு வித்தியாசமான, சமூக அக்கறையுள்ள படத்தை கொடுத்திருப்பார் என்று தெரிகிறது.
மொத்தத்தில் ஒரு தைரியமான நல்ல ஆசிரியை இருந்தால் போதும் ஒரு ஒட்டுமொத்த பள்ளியையே மாற்றிவிடலாம் என்ற கருத்தை கூற வரும் இந்த படம் நிச்சயம் ஜோதிகாவுக்கு இன்னொரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது