அமித்ஷாவுக்கு செக் வைக்கும் சிவசேனா.. நீதிபதி லோயாவின் மர்ம மரணத்தை விசாரிக்க தொடங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு..!
- IndiaGlitz, [Thursday,January 09 2020]
நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கு மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்படும், இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று மகாராஷ்டிரா அரசு சார்பாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவை முக்கிய குற்றவாளியாக கருதி சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இவ்வழக்கில் அமித்ஷா ஒவ்வொரு முறையும் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்த லோயா உத்தரவிட்டிருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. ஆனால் சர்ச்சை முடியும் முன்பே நீதிபதி லோயா திடீரென 2014-ம் ஆண்டு மரணமடைந்தார். அதன்பின் சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்தே அமித்ஷா அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.
நீதிபதி லோயா கடந்த 2014ல் டிசம்பர் 1ம் தேதி, திருமண விழா ஒன்றிற்கு சென்ற போது திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு எந்த விதமான கெட்ட பழக்கமும் கிடையாது. 81 வயது தாண்டிய அவரது தந்தையே இப்போதும் உயிரோடு இருக்கிறார். இதனால் அவரது மரணம் இயற்கையானது கிடையாது என்று சந்தேகம் எழுந்தது.
லோயா இறந்த பின் சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்தே அமித்ஷா அதிரடியாக விடுவிக்கப்பட்டார். இது இன்னும் பெரிய சந்தேகத்தை உருவாக்கியது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்கள்.
இந்த விசாரணையின் போதே லோயா மாரடைப்பு காரணமாக மரணம் அடையவில்லை என்று சிபிஐ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தது. மேலும் அதேபோல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அவரது உடற்கூறு அறிக்கையும் வெளியானது. அதன்படி அவருக்கு பின் தலையில் அடிப்பட்டு இருந்ததை மருத்துவர் வேண்டுமென்றே மறைத்துவிட்டார் என்று தகவல் வெளியானது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் லோயா மரணம் இயற்கையானது. அவரது மரணம் குறித்து நீதிவிசாரணை எதுவும் செய்ய அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதன் மீதான விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசுக்கு தேசியவாத காங்கிரஸ்,காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது.என்சிபி, காங்கிரஸ் கட்சிகளின் ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா இதை ஏற்றுக்கொள்ள இருப்பதாக செய்திகள் வருகிறது. இது தொடர்பாக நேற்று நடந்த மூன்று கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
இந்த ஆலோசனை தொடர்பாக பேட்டி அளித்த என்சிபி மூத்த அமைச்சர் நவாப் மாலிக், லோயாவின் மரண வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். இந்த மரணம் இயற்கையானது இல்லை என்பதற்கு ஆதாரம் தேடப்பட்டு வருகிறது. உரிய ஆதாரம் கிடைத்தவுடன் விசாரணையை துவங்குவோம் என்று நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.