ஓடி ஒளியவில்லை. சென்னையில்தான் இருக்கின்றார். நீதிபதி கர்ணன் வழக்கறிஞர் மனுதாக்கல்

  • IndiaGlitz, [Thursday,May 11 2017]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா நீதிபதி கர்ணன் சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்த நிலையில் அவரை மனநல சோதனைக்கு உட்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அந்த சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த நீதிபதி கர்ணன் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்தார்.
இதனால் நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதங்கள் சிறையில் அடைக்க நேற்று முன் தினம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தும் நோக்கில் கொல்கத்தா போலீசார் நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வந்தனர். ஆனால் சென்னையில் நீதிபதி கர்ணன் இல்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாகவும், ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் தற்போது மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நீதிமன்ற தண்டனை உத்தரவு குறித்து, நீதிபதி கர்ணன் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார். நீதிபதி கர்ணன் சென்னையில்தான் தங்கி உள்ளார். அவர் வேறு எங்கும் தப்பித்து செல்லவில்லை. எனவே அவருக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.