ஜல்லிக்கட்டுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல். வாடிவாசல் திறப்பது எப்போது?

  • IndiaGlitz, [Friday,January 20 2017]

சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அவசர சட்டம் இயற்றாவிட்டாலும், மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தரும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்ததை அடுத்து தமிழக முதல்வர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழக அரசே அவசர சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கையின் அடிப்படையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு, அந்த சட்டத்தை சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஜல்லிக்கட்டுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஜனாதிபதி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஒரே ஒரு படி மட்டுமே பாக்கியுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் இருந்து டெல்லி திரும்பியதும் இந்த அவசர சட்டத்தில் கையெழுத்திடுவார் என்றும் அதன் பின்னர் அதை தமிழக ஆளுனர் சட்டமாக்குவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாடிவாசல் திறக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதும் மாணவர்களின் புரட்சி போராட்டம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.