ஹர்திக் பாண்டியாவை நினைத்தாலே பயமா இருக்கு? கபில்தேவ் கருத்துக்கு என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் இந்தியக் கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் வீரர்கள் அனைவரும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எனக்கு ஹர்திக் பாண்டியாவை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது என அவர் கூறியுள்ள கருத்து ரசிகர்களிடையே பேசுபொருளாகி, என்ன காரணம் என்று சிந்திக்க வைத்துள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து ஒன்றரை வருடத்திற்கும் மேலாக காயம் காரணமாக ஓய்வில் இருந்து பின்னர் இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 5 முதல் ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் துவங்க இருக்கிறது.
அதற்கு முன்பு ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 31- செப்டம்பர் 17 வரை நடைபெற இருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் வரும் 12 ஆம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். ஆனால் டி20 போட்டிக்கு பிசிசிஐ தனியாக ஒரு அணியைத் தேர்வு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வீரர்களின் உடல்தகுதி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் காயம் என்பது ஒரு பகுதியாகத்தான் இருக்க வேண்டும். தற்போதுள்ள நிலைமை முன்னேறும் என நான் நினைக்கிறேன். ஆனால் எனக்கு ஹர்திக் பாண்டியாவை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. காரணம் அவர் விரைவில் காயம் அடைந்து விடுகிறார்.
நமது வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருந்தாலே இந்திய அணி உலகக்கோப்பை போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாகத் திகழும். உலகக்கோப்பை என்பது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. எனவே வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்.
மேலும் ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு வீரர்கள் பயிற்சி போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். அதிகமாக ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும். போட்டிக்குத் தயாராகும்வரை டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏற்கனவே தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் காரணமாக பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கே.எல்.ராகுல் ஒருநாள் அணிக்கு விக்கெட் கீப்பராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வந்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments