விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Wednesday,June 13 2018]

விஜய்சேதுபதி, சாயீஷா, மடோனா செபாஸ்டியன், யோகிபாபு நடிப்பில் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய்' பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் காமெடி படமான 'ஜூங்கா' படத்தின் டிரரலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் குறிப்பாக நகைச்சுவை காட்சிகள் கூட வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது என்பது டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

'எப்பவுமே மத்தவங்க கீழே இறக்கிவிட்டுட்டு நம்ம மேல ஏறி வரணும்ன்னு நினைக்கிறது தப்பு. நம்ம மேலே ஏறி வந்ததுக்கு அப்புறம், இடம் இல்லை கொஞ்சம் கீழே இறங்கிக்கோங்கன்னு நாசுக்கா சொன்னா அவங்களே இறங்கிடுவாங்க' என்ற பஞ்ச் டயலாக்குகளுடன் ஆரம்பமாகிறது 'ஜூங்கா' டிரைலர்

அதேபோல் 'இந்த இடத்திற்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கேன், என்னை தேடி வர்றவங்களுக்கு நான் ரொம்ப இறங்கி செய்வேன்' என்று விஜய்சேதுபதியின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வசனமும் இந்த டிரைலரில் உண்டு.

விஜய்சேதுபதி டான் ஆக நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு தான் ஒரு அசிஸ்டெண்ட் டான் என்று சொல்வதில் இருந்தே இந்த படத்தில் ரசிக்கும்படியான நகைச்சுவை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அழகு பதுமைகளாக சாயிஷா, மடோனே செபாஸ்டியன் ஆகிய நாயகிகளும், சுரேஷ் மேனன், ராதாரவி போன்ற சீனியர் நடிகர்களும், காமெடிக்கு யோகி பாபுவும், வழக்கமான நடிப்புக்கு சரண்யா பொன்வண்ணனும் இந்த படத்தில் உள்ளனர்.

டட்லியின் ஒளிப்பதிவில் வெளிநாட்டு காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கச்சிதமான எடிட்டிங்கில் வெளிவந்துள்ள இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சித்தார்த் விபின் பின்னணி இசை இந்த படத்திற்கு வலு சேர்க்கும் என்பதில் டிரைலரில் இருந்தே தெரிகிறது. மொத்தத்தில் 'ஜூங்கா' விஜய்சேதுபதியின் இன்னொரு வெற்றிப்படமாக அமைய அதிக வாய்ப்புள்ளது.