'ஜூங்கா' - முழுக்க முழுக்க ஜாலி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்சேதுபதி, கோகுல் இணைந்த படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் விஜய்சேதுபதியின் சொந்தப்படம், வெளிநாட்டில் படமாக்கப்பட்ட படம், சாயிஷா நாயகியாக நடித்த படம் என்பதால் எதிர்பார்ப்ப்பின் விகிதங்கள் அதிகரித்தன. எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி படம் இருந்ததா? என்பதை தற்போது பார்ப்போம்
தாத்தா, அப்பாவுக்கு அடுத்து டான் ஆகியிருக்கும் விஜய்சேதுபதிக்கு தனது பரம்பரை சொத்தான தியேட்டரை மீட்டெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கிடைக்கும் வேலையெல்லாம் செய்கிறார். நாயை தேடி கொடுக்கும் வேலை முதல், கொலை செய்யும் வேலை வரை செய்யும் விஜய்சேதுபதியின் ஜூங்கா கூட்டம் ஒரு கட்டத்தில் ஒரு கோடி ரூபாயை சேர்த்துவிடுகிறது. அதன்பின்னர் தியேட்டர் ஓனரான சுரேஷ்மேனனிடம் போய் தியேட்டரை விலைக்கு கேட்டபோது அவர் விஜய்சேதுபதியை அவமதித்து அனுப்பிவிடுகிறார். அதன் பின்னர் சுரேஷ்மேனனின் மகள் சாயிஷா, பாரீசில் இருப்பதை கேள்விப்பட்டு அவரை கடத்தி சுரேஷ்மேனனை மிரட்டி தியேட்டரை எழுதி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது அசிஸ்டெண்ட் யோகிபாபுவுடன் பாரீஸ் செல்கிறார் விஜய்சேதுபதி. பாரீசில் சாயிஷாவை கடத்தினாரா? தியேட்டரை கைப்பற்றினாரா? என்பதுதான் மீதிக்கதை
'நானும் ரெளடிதான்' படத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு காமெடி டான் கேரக்டர் விஜய்சேதுபதிக்கு. ஆனால் அந்த படத்தை ஒரு காட்சியில் கூட ஞாபகப்படுத்தவில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். படம் முழுவதும் கேப் விடாமல் காமெடி செய்கிறார். குறிப்பாக பாரீசில் யோகிபாபுவுடன் அவர் செய்யும் காமெடி அட்டகாசங்கள் சூப்பர். அதேபோல் ஏழைகள் குறித்து இழிவாக பேசும் சுரேஷ் மேனனிடம் பொங்குவது முதல் கிளைமாக்ஸில் நீளமாக சாயிஷாவிடம் தனது லட்சியம் குறித்து பேசும் நீண்ட டயலாக் வரை விஜய்சேதுபதியின் நடிப்பு அருமை. தாத்தா, அப்பா, மகன் என மூன்று வித்தியாசமான கெட்டப்பிலும் அசத்துகிறார். ஆனால் அவர் பேசும் டயலாக் பாணியை மாற்றிக்கொண்டால் நல்லது. பல காட்சிகள் அவர் என்ன பேசுகிறார் என்பதே புரியவில்லை.
2500 கோடி ரூபாய்க்கு சொத்து இருந்தாலும் ஒரு ஏழை, ரெளடியைத்தான் காதலிக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் ஃபார்முலா இந்த படத்திலும் சாயிஷா கேரக்டர் மூலம் இருக்கின்றது. அப்பா சுரேஷ் மேனனிடம் போனில் பேசும் காட்சி தவிர சாயிஷாவுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. ஆனால் டான்ஸ் சூப்பராக ஆடுகிறார்.
இந்த படத்தின் காமெடி நடிகர் என்று சொல்வதைவிட இரண்டாவது ஹீரோ என்றே யோகிபாபுவை கூறலாம். அசிஸ்டெண்ட் டான் ஆக விஜய்சேதுபதியிடம் மாட்டிக்கொண்டு அவர் புலம்பும் புலம்பலில் தியேட்டரே கலகலக்கின்றது. குறிப்பாக பாரீஸ் போலீசிடம் மாட்டிக்கொண்டு அவர்களுக்கு புரியாத தமிழ் மொழியில் பேசும் காட்சி சூப்பர் காமெடி
சரண்யாவும் விஜய்சேதுபதியின் பாட்டியாக நடித்தவரும் தோன்றும் காட்சிகள் அனைத்து காமெடிக்கு உத்தரவாதம். மடோனா கேரக்டர் இந்த படத்திற்கு தேவையா? என்ற கேள்வியே எழுகிறது. சுரேஷ் மேனன், ராதாரவி கொடுத்த வேடத்தை சரியாக செய்துள்ளனர்.
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை என்றாலும் ஒரு டார்க் காமெடி படத்திற்கு ஏற்ற பின்னணி இசையை தந்துள்ளார். டட்லியின் கேமிரா பாரீசின் அழகிய காட்சிகளை அற்புதமாக படமாக்கியுள்ளது. சபுஜோசப்பின் எடிட்டிங் கச்சிதம்
இயக்குனர் கோகுல் ஒரு டார்க் காமெடி படம் என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட்டதால் லாஜிக்கை தூக்கி ஓரமாக வைத்துவிட்டார். பத்துமாடி கட்டிடத்தில் இருந்து ஒருவரை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு எந்தவித பரபரப்பும் இன்றி அடுத்த வேலையை ஜூங்கா டீம் தொடங்குகிறது முதல் பாரீஸ் போலீஸ் தலைமையகத்தில் மாட்டி கொண்டு அவர்களிடம் இருந்து எளிதாக தப்பிப்பது வரை லாஜிக்கை கொஞ்சம்கூட நாம் எதிர்பார்க்ககூடாது என்பதை இயக்குனர் நமக்கு கூறுகிறார். ஆனால் தான் எடுத்து கொண்ட காமெடி என்ற பிடியை அவர் முதலில் இருந்து கடைசி காட்சி வரை விடவில்லை. ஒரு காமெடியை ரசித்து சிரித்து முடிப்பதற்குள் அடுத்த காமெடி என படம் முழுவதும் சிரிக்க வைத்துவிடுகிறார். இடையிடையே ஏழைகள், போராட்டம், தியேட்டர் டிக்கெட் விலையை விட பாப்கார்ன் விலை அதிகம் போன்ற சமூக கருத்துக்களையும் நுழைத்திருப்பது புத்திசாலித்தனம். அதேபோல் நம்பமுடியாத கிளைமாக்ஸ் ஆக இருந்தாலும் எதிர்பாராத கிளைமாக்ஸ் என்பதால் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஒரு திருப்தி தெரிகிறது.
மொத்தத்தில் லாஜிக் பார்க்காமல் ஒரு இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரிப்பதற்கென்றே இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்
Comments