ஜூலை 27ம் தேதி 12ம் வகுப்பு பொது தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,July 08 2020]
12ம் வகுப்பு பொது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2020இல் நடத்தி முடிக்கப்பட்டது. 24.3.2020 அன்று நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் பொதுத் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் விடுத்த கோரிக்கையினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து, 24.3.2020 அன்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தார்கள். அதன்படி, இத்தேர்வினை 27.7.2020 அன்று நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்கள் அவர்தம் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இத்தேர்விற்கான புதிய நுழைவு சீட்டுகளை மாணவர்கள் தாங்களே http://www.dge.in.gov.in/ என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்து 13.7.2020 முதல் 17.7.2020 வரை பெற்றுக்கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை இத்தேதிகளில் சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக, தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் எவரேனும் இருப்பின், அவர்கள் தேர்வு மையங்களில் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
அரசு வெளியிட்டுள்ள கோவிட்-19 நோய் தொற்று கட்டுப்பாடு தொடர்பான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அனைத்தும் இத்தேர்வு நடத்துவதில் பின்பற்றப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.