ரஜினியின் 'காலா' படத்தை நீதிபதிகள் பார்க்க ஐகோர்ட்டில் மனு
- IndiaGlitz, [Wednesday,September 12 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் கடந்த ஜூன் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் ரஜினிக்கு ஏற்ற வகையில் உள்ள படமாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தபோதிலும் நிலமில்லாதவர்கள் குறித்த அழுத்தமான கருத்தை இயக்குனர் வலியுறுத்தியதாக விமர்சிக்கப்பட்டது. மேலும் ஏழை எளியோர் வசிக்கும் நிலத்தை பிடுங்க அதிகாரமிக்கவர்கள் செய்யும் சூழ்ச்சி குறித்தும் இந்த படத்தில் விளக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 'நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளும் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், தங்களை போன்ற நிலம் இல்லாதவர்களின் துயரத்தை நீதிபதிகள் புரிந்துகொள்ளவே காலா படத்தை பார்க்க தான் மனுதாக்கல் செய்வதாகவும் கூறியுள்ளார்.
சென்னை-சேலம் எட்டு வழி சாலைக்காக விவசாயிகளின் நிலத்தை அரசு கையகப்படுத்தி வரும் நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும் என நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.